செவ்விதி னோக்கி யாகந் திருகநின் றெறிந்தான் பக்கங்
கௌவிய மணிவில் வீச விசையொலி கறங்கிப் பாயப்
பைவிரித் துயிர்த்து நாகம் விழுங்கவாய்ப் பட்ட மீன்போல்
வெவ்வினைச் சுறவே றையன் விடுவலைப் பட்ட தன்றே. |
(இ
- ள்.) செவ்விதின் நோக்கி - (மீன் இருக்குமிடத்தினைத்)
தப்பாமற் பார்த்து; ஆகம் திருக நின்று - உடல் திருக நின்று, பக்கம்
கௌவிய மணிவில் வீச - விளிம்பிற் பொருந்திய மணிகள் ஒளி வீசவும்,
விசை ஒலி கறங்கிப்பாய எறிந்தான் - வீசிய வேகத்தாலுண்டாகிய ஒலி
எங்கும் ஒலித்துப்பரவவும் வீசினன்; பைவிரித்து உயிர்த்து நாகம் விழுங்க -
படத்தினை விரித்துச் சீறிப் பாம்பானது விழுங்க, வாய்ப்பட்ட மீன்போல் -
அதன்வாயில் அகப்பட்ட மீன்போல, வெவ்வினைச் சுறவு ஏறு -
கொடுந்தொழிலையுடைய அச் சுறாமீன், ஐயன் விடுவலைப்பட்டது -
இறைவன் வீசிய வலையின்கண் அகப்பட்டது.
ஆகம்
திருக நிற்றல் - பைசாசம். மண்டிலம் முதலிய நிலைவகையுள்
அடங்கும். மணிவில் வீசலாலும் விசையொலி கறங்கினமையாலும் அவ்வலை
பை விரித்துயிர்த்த நாகம்போன்றது. அன்று, ஏ அசைகள். (54)
மாசறு கேளி ரன்பின் வலைப்படு வலைஞர் கோன்றாய்*
வீசிய வலையிற் பட்ட மீனினைச் சுருக்கி வாங்கிக்
காசெறி தரங்க முந்நீர்க் கரையிடை யிட்டான் கள்வாய்
மூசுதே னென்ன வார்த்து மொய்த்தன பரதச் சாதி. |
(இ
- ள்.) மாசு அறு கேளிர் அன்பின் வலைப்படு வலைஞர்கோன் -
குற்றமற்ற அடியார்களது அன்பாகிய வலையின்கண் அகப்படும் வலைஞர்
தலைவன், தாய் வீசிய வலையில் பட்ட மீனினை - தாவி வீசிய
வலையின்கண் அகப்பட்ட மீனை, சுருக்கி வாங்கி - சுருக்கி இழுத்து, காசு
எறி தரங்க முந்நீர்க்கரையிடை இட்டான் - மணிகளை வீசும்
அலைகளையுடைய கடலினது கரையின்கண் போட்டான்; கள் வாய் மூசு
தேன் என்ன - கள்ளினிடத்து மொய்த்த வண்டுகள்போல, பரதச்சாதி
ஆர்த்து மொய்த்தன - வலைஞர் மரபினர் ஆரவாரித்து மொய்த்தனர்.
இறைவற்குக்
கேளிராவார் அடியாரென்க. அன்பு வலையி
லகப்படுதலை,
"பத்திவலையிற் படுவோன் காண்க." |
என்னும் திருவாசகத்தாலறிக.
தாய், தாவி என்பதன் விகாரம். இறைவன்
இங்ஙனம் கானவனாகி மீன்வலை வீசிய திருவிளையாட்டை,
"அணிமுடி
யாதி யமரர்கோமா னானந்தக் கூத்த னறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன் பெண்பாலுகந்து
மணிவலை கொண்டு வான்மீன்விசிறும் வகையறி வாரெம்
பிரானாவாரே" |
என எடுத்தேத்தும் திருவாசகம்.
(55)
(பா
- ம்.) *கோன்றான்.
|