வலைவீசின படலம் 187



கண்களுடைய புதல்வியாரும், விண்ணிடை விடை மேற்கொண்டு -
வானின்கண் இடபவூர்தியில் ஏறியருளி, தம் நிலை வடிவாய்த் தோன்ற -
தமக்கு உரிய சகளத் திருமேனியுடன் தோன்ற, தடம்கரை மீனம் தானும் -
பெரிய கடற்கரையிற் கிடந்த மீனும், நன்நிலை வடிவே போன்று -
முன்னுள்ள நல்லவடிவமே போல, நந்தியாய் முந்தித்தோன்ற - திருநந்தி
தேவராகித் திருமுன் முற்பட்டுத் தோன்ற.

     வடிவேபோன்று - வடிவேயாகி. (58)

கொற்றவெள் விடைமேற் காட்சி கொடுத்தவர் கருணை நாட்டம்
பெற்றலின் மேலைச் சார்பாற் பிணித்தவிப் பிறவி யாக்கைச்*
சிற்றறி வொழிந்து முந்நீர்ச் சேர்ப்பனல் லறிவு தோன்றப்
பொற்றனு மேரு வீரன் பூங்கழ லடிக்கீழ்த் தாழ்ந்தான்.

     (இ - ள்.) கொற்றம் வெள் விடைமேல்காட்சி கொடுத்தவர் -
(அங்ஙனம்) வெற்றிபொருந்திய வெள்ளிய இடபவூர்தியிற் காட்சி கொடுத்த
அவ்விறைவரது, கருணை நாட்டம் பெற்றலின் - அருட்பார்வையைப்
பெற்றதனால், முந்நீர்ச் சேர்ப்பன் - கடற்றுறையினையுடைய நெய்த
னிலத்தலைவன், மேலைச்சார்பால் பிணித்த - முன்வினைச்சார்பினாற்
பந்தித்த, இப்பிறவியாக்கைச் சிற்றறிவு ஒழிந்து - இப்பிறவியின் சிற்றறிவு
நீங்கி, நல் அறிவு தோன்ற - நல்லுணர்வு தோன்றா நிற்க, பொன் மேரு
தனு வீரன் - பொன்மேருவை வில்லாக வளைத்த வீரனாகிய
அவ்விறைவனது, பூங்கழல் அடிக்கீழ்த் தாழ்ந்தான் - அழகிய வீரக்
கழலணிந்த திருவடியின் கீழ் வீழ்ந்து வணங்கினான்.

     இறைவர் கருணை நாட்டத்தால் பிறவிச்சார்பு அகலுதலை,

"அங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல"

என்னும் பெரிய புராணச் செய்யுளானுமறிக. (59)

இரக்கமி லிழிந்த யாக்கை யெடுத்துழ லேழை யேனைப்
புரக்கவின் றென்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி
அரக்கெறி பவளச் செவ்வா யணங்கினை மணந்தென் பாசங்
கரக்கவெள் விடைமே னின்ற கருணையே போற்றி யென்றான்.

     (இ - ள்.) இரக்கம் இல் இழிந்தயாக்கை எடுத்து - (உயிர்களின்மாட்டு)
அருளில்லாத இழிந்த உடலை எடுத்து, உழல் ஏழையேனை - வருந்தும்
அறிவிலியாகிய என்னை, இன்று புரக்க - இன்று காத்தற் பொருட்டு,
என்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி - என்னைப்போலவே
உருவெடுத்து வந்த அருளுருவே வணக்கம்; அரக்கு எறி பவளச் செவ்வாய்
அணங்கினை மணந்து - செவ்வொளி வீசும் பவளம் போன்ற சிவந்தவாயினை
யுடைய அம்மையைத் திருமணம் புரிந்து, என்பாசம் கரக்க


     (பா - ம்.) *பிறவிவாழ்க்கை.