வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்191



யுடைய வையையாற்றினது கரையின்கண், வாதவூர் உளது - திருவாதவூர்
என்னும் திருப்பதி உள்ளது.

"வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து"

என்பது வாயுறைவாழ்த்தாகலின் வறியார்க்கே ஈதல்வேண்டும்; அவருள்ளும்
பிறர்க்குப் பயன்படுவார்க்கீதல் சிறந்தது. வயலும் குளமும் வறியனவும்
பிறர்க்குப் பயன்படுவனவும் ஆகும். அடுத்த - இருமருங்கும் பொருந்திய.
கடலுக்கு வறுமையின்மையும் கொள்க. உவரி - உவர் நீர் உடையது;
இ - வினைமுதற்பொருள் விகுதி. வையையாறு இயல்பாகக் கடலிற்
கலவாமையைக் கடல் வறுமையின்மையும் பயன்படாமையும் உடையதென
அதில் மடுத்தறியாதெனக் கற்பித்துக் கூறினமையால் இது தற்குறிப்பேற்றவணி.
இதனால் ஒரு காலத்தில் வையையாறு கடலிற் கலவாதாயிற்றென அறிக. (2)

விழவறா நகரெங்கும் விருந்தறா மனையெங்கும்
மழவறா மகிழ்வெங்கு மறையறா கிடையெங்கும்
முழவறா வரங்கெங்கு முகிலறா பொழிலெங்கும்
உழவறா வயலெங்கு முடம்பறா வுயிரென்ன.

     (இ - ள்.) உடம்பு அறா உயிர் என்ன - உடலினின்றும் நீங்காத உயிர்
போல, நகர் எங்கும் விழவு அறா - நகர் முழுதும் திருவிழாக்கள் நீங்கா;
மனை எங்கும் விருந்து அறா - இல்லம் அனைத்தினும் விருந்துகள் நீங்கா;
எங்கும் மகிழ்வு மழவு அறா - யாண்டும் மகிழ்ச்சியைத்தரும் பிள்ளைகள்
நீங்கா; கிடை எங்கும் மறை அறா - பாடசாலைகள் யாவற்றிலும் வேதங்கள்
ஓழியா; அரங்கு எங்கும் முழவு அறா - நாடக சாலை எங்கணும்
மத்தளஒலிகள் ஓயா; பொழில் எங்கும் முகில் அறா - சோலைகள்
அனைத்திலும் மேகங்கள் நீங்கா; வயல் எங்கும் உழவு அறா - வயல்கள்
எல்லாவற்றிலும் உழவுத்தொழில்கள் ஓயா.

     விருந்து - புதுமை; இஃது ஆகுபெயராய்ப் புதியராய் வந்தாரை
உணர்த்திற்று. மழவு - இளமை; இஃது குழவியை உணர்த்திற்று; 'முருகு'
என்பது போல். மறை - வேத மோதல். கிடை - வேதமோதுஞ்சாலை.
உடம்பறாவுயிரென்ன என்ற உவமையால் நகர் முதலியவற்றிற்கு விழவு
முதலியன பொலிவு தருதல் பெற்றாம். (3)

ஆயவளம் பதியதனி னமாத்தியரி லருமறையின்
றூயசிவா கமநெறியின் றுறைவிளங்க வஞ்சனையான்
மாயனிடும் புத்தவிரு ளுடைந்தோட வந்தொருவர்
சேயவிளம் பரிதியெனச் சிவனருளா லவதரித்தார்.

     (இ - ள்.) ஆயவளம்பதி அதனில் - அங்ஙனமாகிய வளமிக்க
அந்நகரின் கண், அமாத்தியரில் - அமாத்தியர்மரபில், அருமறையின் தூய
சிவாகம நெறியின் துறைவிளங்க - அரிய வேத நெறியும் தூய்மையாகிய
சிவாகமத்துறையும் விளங்கவும்; மாயன்வஞ்சனையால் இடும் புத்த இருள்