வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்193



"எக்கலையுங் கற்றுணர்ந்தார் ஈரெட்டாண் டெல்லையினில்"

என்றார் கடவுண்மா முனிவரும். (5)

இத்தகையோர் நிகழ்செய்தி யறிந்தவர்சென் றியம்பவரி
மர்த்தனபாண் டியன்கேட்டு வரவழைத்து மற்றவரைச்
சித்தமகிழ் வரிசையினாற் சிறப்பளித்துத் தன்கோயில்
வித்தகநன் மதியமைச்சின் றொழில்பூட்டி மேம்படுத்தான்.

     (இ - ள்.) இத்தகையோர் நிகழ் செய்தி அறிந்தவர் -
இப்பெருமையினை யுடையார் ஒருவர் இருக்குஞ் செய்தியை அறிந்த சிலர்,
சென்று இயம்ப - போய்ச்சொல்ல, அரிமர்த்தன பாண்டியன் கேட்டு -
அரிமர்த்தன பாண்டியனென்பான் (அதனைக்) கேட்டு, அவரை வரவழைத்து
- அவரைத் தன்பால் வருவித்து, சித்தம் மகிழ் வரிசையினால் சிறப்பு
அளித்து - மனமகிழுதற் கேதுவாகிய வரிசையோடு மேன்மையும் அளித்து,
தன் கோயில் வித்தக நன்மதி அமைச்சின் தொழில் பூட்டி - தனது
அரமனையின் சதுரப்பா டமைந்த நல்லமதிமிக்க அமைச்சுத்
தொழிலையுந்தந்து, மேம்படுத்தான் - சிறப்பித்தான்.

     வரிசை - நவமணிக்கலன், பொன்னாடை முதலிய சீர்சால் கொடை.
சிறப்பு என்பதனைத் தென்னவன் பிரமராயன் என்னும் சிறப்புப் பெயரெனக்
கொள்ளின் அமைச்சின் தொழில்பூட்டி அவர் திறம்கண்டு, பின்
சிறப்பளித்தான் என்னல் வேண்டும்.

"தென்னவன் பிரம ராய னென்றருள் சிறந்த நாமம்
மன்னவர் மதிக்க நல்கி வையக முய்வ தாக
மின்னவ மணிப்பூ ணாடை வெண்மதிக் கவிகை தண்டு
பொன்னவிர் கவரி வேழ மளித்தனன் பொருநை நாடான்"

என்பது திருவாதவூரடிகள புராணம். (6)

செற்றமிகுங் கருவிகளின் றிறநூலு மனுவேந்தன்
சொற்றபெருந் தொன்னூலுந் துளக்கமற விளக்கமுறக்
கற்றறிந்தோ ராதலினாற் காவலற்குக் கண்போன்ற
முற்றுணர்ந்த வமைச்சரினு முதலமைச்ச ராய் நிகழ்வார்.

     (இ - ள்.) செற்றம்மிகும் கருவிகளின் திறநூலும் - சினமிக்க
கருவிவகைகட்குரிய நூல்களையும், மனுவேந்தன் சொற்ற பெருந்தொல்
நூலும் - மனுவென்னும் மன்னனாற் கூறப்பட்ட பெருமையுந் தொன்மையும்
உடைய நூலையும், துளக்கம் அற விளக்க முற - ஐயந்திரிபு நீங்க விளக்கம்
பொருந்த, கற்று அறிந்தோர் ஆதலினால் - கற்று உணர்ந்தவர் ஆகலின்,
காவலற்குக் கண்போன்ற முற்று உணர்ந்த அமைச்சரினும் - மன்னனுக்குக்
கண்போன்ற முற்று முணர்ந்த அமைச்சர்களினும், முதல் அமைச்சராய்
நிகழ்வார் - முதல் மந்திரியாக ஒழுகுவாராயினர்.


     (பா - ம்.) வரிசை யிறைச் சிறப்பளித்து.