வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்195



     நன்னெறியிற் செலுத்தலால் அரசனுக்குக் கண்ணும், தெய்வத்தால்
வரும் இடையூறுகளைச் சாந்தியானும் மக்களால் வரும் இடையூறுகளை
நால்வகை உபாயங்களானும் போக்கிப் பாதுகாத்தலின் அவற்குக் கவசமும் போல்வாரென்க.

"காதலித் தறஞ்செய் வோர்க்குக் கவசமுங் கண்ணு மாகி
ஏதிலர்க் கிடும்பை யாகி யிறைஞ்சினர்க் கின்ப மாகி
ஆதுலர்க் கன்னை யாகி யரனடிக் கன்பு மிக்கார்
பூதலத் திறைவ னாணை பொதுவற நடத்து நாளில்"

என்பது திருவாதவூரர் புராணம். (9) கலிநிலைத்துறை

மெய்ம்மை யாம்பொருள் விவேகமும் வேறுபா டாய
பொய்ம்மை யாம்பொருள் விவேகமும் புந்தியுட் டோன்ற
இம்மை யாசையு மறுமையி லாசையு மிகந்து
செம்மை யாகிய கருத்தராய்ப் பரகதி தேர்வார்.

     (இ - ள்.) மெய்ம்மையாம் பொருள் விவேகமும் - மெய்யாகிய
பொருளின் உணர்ச்சியும், வேறுபாடாய - அதற்கு வேறான, பொய்ம்மையாம்
பொருள் விவேகமும் - பொய்யாகிய பொருளின் உணர்ச்சியும், புந்தியுள்
தோன்ற - உள்ளத்தின் கண் உதிக்க, இம்மை ஆசையும் - இம்மையின்
பத்தில் விருப்பமும், மறுமையில் ஆசையும் - மறுமை யின்பத்தில்
விருப்பமும், இகந்து - நீங்கி, செம்மையாகிய கருத்தராய் - மனத்தூய்மை
யுடையராய், பரகதி தேர்வார் - வீடடையும் நெறியினை ஆராய்வராயினர்.

     மெய்ம்மையாம் பொருள் - நித்தப் பொருள்; தனக்கோர் ஆக்கக்
கேடுகளின்றிச் சுட்டறிவிற் படாது நின்ற சத்துப் பொருள். பொய்ம்மையாம்
பொருள் - அநித்தப் பொருள்; ஆக்கக் கேடுகளுடைத்தாய்க் கால தேய
முதலியவற்றால் ஏகதேசப்படுதலும் பலவேறு வகைப்படுதலு முடைத்தாய்ச்
சுட்டறிவிற் கெட்டி நிற்கும் அசத்துப் பொருள். இம்மை மறுமை யின்பங்கள்
இந்திரசாலம் போலத் தோன்றும்போதே இலவாதலும், கனாவைப் போல
முடிவு போகாது இடையே யழிதலும், பேய்த்தேர் போல ஒரு காரணங்காட்டி
நிலை பெறாமையு முடைமையால் 'இம்மை யாசையு மறுமையி லாசையுமிகந்து'
என்றார். செம்மையாகிய கருத்தராய் என்றது சிவபுண்ணிய முதிர்ச்சியால்
இருவினை யொப்புடையராய் என்றபடி. இனி, நித்தியா நித்திய வஸ்து
விவேகம், இகபரபோக விராகம், சமம் முதலிய அறுகுணப்பேறு,
முமூட்சுத்துவம் எனப்படும் வீட்டிச்சை ஆகிய மோக்க சாதனம் நான்கும்
இப்பாட்டில் முறையே கூறப்பெற்றன வெனவுங் கொள்க. (10)

புத்த ராதியோர் புறவுரை நெறிகளும் பொய்யா
நித்த வேதநூ றழுவிய வகவுரை நெறியுஞ்
சித்த மாசறுத் தரனருட் டெளிவியா வதனான்
மித்தை யாணவத் தொடக்கறா தில்லையாம் வீடும்.