206திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



எனத் திருவாசகம் போற்றித் திருவகவலில் வருதல் காண்க; திருவடியை
இடையறாது சிந்திக்கும் பத்திவலி யமைந்த மாணாக்கர் என்பாரு முளர். (28)

பொருங்கட லனீகமொடு போய்ப்புற வடுத்த
இருங்கட மளப்பில கடந்தெழு பிறப்பாங்
கருங்கடல் கடக்கவரு வார்கருணை வெள்ளப்
பெருங்கட னிறைந்துறை பெருந்துறை யடைந்தார்.

     (இ - ள்.) பொருங்கடல் அனீகமொடு போய் - கரையொடு மோதுங்
கடல் போன்ற சேனைகளோடுஞ் சென்று, புறவு அடுத்த இருங்கடம்
அளப்புஇல கடந்து - முல்லை நிலத்தினை அடுத்த பெரிய காடுகள்
அளவிறந்தவற்றைக் கடந்து, எழு பிறப்பாம் கருங்கடல் கடக்கவருவார் -
எழுவகைப் பிறப்பு என்னும் கரிய கடலைக் கடக்கவரும் அவ்வாதவூரடிகள்,
கருணை வெள்ளப் பெருங்கடல் நிறைந்து உறை - அருள் வெள்ளம்
நிறைந்த பெரிய கடல் நிறைந்து உறையும், பெருந்துறை அடைந்தார் -
திருப்பெருந் துறையினை அடைந்தனர்.

     கடம் - சுரம்; பாலையாகிய காடு. ஒரு கடல் கடக்க வருவார்
மற்றொரு கடல் உள்ள இடத்தை யடைந்தார் என்னும் நயமும்,
பெருங்கடலிலே பெருந்துறை இருப்பது முறையாகவும் பெருந்துறையில்
பெருங்கடல் உறைகின்றது என்னும் நயமும் இன்பம் விளைப்பன. கருணை
வெள்ளப் பெருங்கடல் - சிவபெருமான். (29)

அடுத்திட வடுத்திட வகத்துவகை வெள்ளம்
மடுத்திட முகிழ்த்தகைம் மலர்க்கமல முச்சி
தொடுத்திட விழிப்புன றுளித்திட வினைக்கே
விடுத்திடு மனத்தருள் விளைந்திட நடந்தார்.

     (இ - ள்.) அடுத்திட அடுத்திட - அப்பெருந்துறை எல்லையை
அடுக்க அடுக்க, அகத்து உவகை வெள்ளம் மடுத்திட - மனத்தின்கண்
மகிழ்ச்சிப் பெருக்கு நிறையவும், முகிழ்த்த கைம்மலர்க் கமலம் உச்சி
தொடுத்திட - கூப்பிய கைகளாகிய தாமரை மலர்கள் முடியின்கண் ஏறவும்,
விழிப்புனல் துளித்திட - ஆனந்தக் கண்ணீர் துளிக்கவும், வினைக்கே
விடுத்திடும் மனத்து - இறைவன் திருத் தொண்டுக்கே தம்மைச் செலுத்தும்
மனத்தின்கண், அருள் விளைந்திட நடந்தார் - திருவருள் விளையவும்
நடந்தனர்.

     கமலமலர் எனமாறுக. வினை - ஈண்டு இறை பணி; ஏழனுருபு
நிற்குமிடத்து நான்கனுருபு நின்றது வேற்றுமை மயக்கம்; வினைக்கு விடை
கொடுத்திடும் என்றலுமாம். (30)

பித்திது வெனப்பிறர் நகைக்கவரு நாலாஞ்
சத்திபதி யத்தமது சத்தறிவு தன்னைப்
பொத்திய மலத்தினும் வெரீஇச்சுமை பொறுத்தோன்
ஒத்திழி பிணிப்புறு மொருத்தனையு மொத்தார்.