வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்207



     (இ - ள்.) இது பித்து எனப் பிறர் நகைக்கவரும் - இது பித்து
என்று கூறிப் பிறர் நகை புரியுமாறு வருகின்ற, நாலாஞ் சத்தி பதிய -
நான்காவதாகிய தீவிரதர சத்திநிபாதம் உண்டாக, தமது சத்து அறிவு
தன்னைப் பொத்திய - தமது உண்மையறிவினை மறைத்த, மலத்தினும்
வெரீஇ - மலத்தினின்றும் அஞ்சி, சுமை பொறுத்தோன் ஒத்து - (முன்)
சுமை பொறுத்தோனை ஒத்து, இழிபிணிப்புறும் ஒருத்தனையும் ஒத்தார் -
(பின்) கட்டு நீங்கியவனையும் ஒத்தார்.

     அருள் வயத்தராய்த் தம் வயமழிந்து நிற்பார் ஒன்றனை ஒருகாற்
செய்து ஒருகால் இழத்தலை நோக்கி உலகினர் பித்தென நகையா நிற்பர்.

"சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப
நாணது வொழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு"

"பித்தனென்றெனை யுலகவர் பகர்வதோர் காரணமிது கேளீர்"

எனவரும் திருவாசகவடிகளை நோக்குக. சத்திநிபாதம் மந்ததரம், மந்தம்,
தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்; அரக்கு வெய்யிலில்
வெதும்புவது போல்வது மந்ததரம், மெழுகு வெய்யிலில் உருகுவது போல்வது
மந்தம், நெய் சூட்டிலிளகுவது போல்வது தீவிரம், நெய் நெருப்பிலுருகுவது
போல்வது தீவிரதரம் என்க; தைலம் இடையறா தொழுகுவது போல்வது
தீவிரதரம் என்றுமாம். மலத்தினும் வெரீஇ - மலத்தினின்றும் அஞ்சி நீங்கி.
முன் சுமை பொறுத்தோனையும் கட்டுண்டோனையும் ஒத்திருந்து இப்பொழுது
சுமை யிறக்கியவனையும் கட்டு நீங்கியவனையும் ஒத்தார் என
உரைத்துக்கொள்க. இழி என்பதனைச் சுமையொடு கூட்டிச் சுமை யிறக்கிய
என்றும், பிணிப்புடன் கூட்டிப் பிணிப்பு நீங்கிய என்றும் பொருள் கொள்ள
வேண்டும்.

"ஆவதெ னிதனைக் கண்டிங் கணைதொறு மென்மேற் பாரம்
போவதொன் றுளது போலும்"

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நோக்கற் பாலது. (31)

நெருப்பிலிடு வெண்ணெயென நெஞ்சுருக வென்னை
உருக்குமித னாலெனை யொளித்தமல வாற்றல்
கருக்குமவ னாகியெனை யாள்கருணை வெள்ளம்
இருக்குமிட னேயிதென வெண்ணிநகர் புக்கார்.

     (இ - ள்.) நெருப்பில் இடுவெண்ணெய் என - நெருப்பிலிட்ட
வெண்ணெய் உருகுவதுபோல, நெஞ்சு உருக என்னை உருக்கும் - நெஞ்சு
உருகுமாறு அடியேனை உருக்குகின்ற, இதனால் - இவ்வேதுவினால், எனை
ஒளித்த மல ஆற்றல் கருக்கு மவனாகி - என் அறிவினை மறைத்த ஆணவ
மலத்தின் வலியினைத் தீர்ப்பவனாகி, எனை ஆள் கருணை வெள்ளம் -
அடியேனை ஆட்கொள்ளும் கருணையங்கடல், இருக்கும் இடன் இதுவே