சுந்தரப் பேரம்பெய்த படலம் 21



தென்றுங்கருதி, தருக்குமேல்கொடு சங்கு எடுத்து முழக்கினான் -
செருக்கினை மேற்கொண்டு வெற்றிச்சங்கை எடுத்து ஊதினான். (19)

அந்த வேலையின் முன்ன ருந்தம தருளெ னக்குளிர் கடிபுனற்
பந்தர் நீழ லளித்து மோடை படுத்தி யும்பகை சாயவே
வந்த வேடர வண்ண மேயொரு மான வேடர சாய் வலஞ்
சிந்த வாகுல மூழ்கு மீனவன் * சேனை காவல ராயினார்.

     (இ - ள்.) அந்த வேலையின் - அப்பொழுது, முன்னரும் -
முன்னேயும், தமது அருள் எனக்குளிர் கடிபுனல் பந்தர் நீழல் அளித்தும்
- தமது அருள்போலக் குளிர்ந்த மணமுள்ள நீரைப் பந்தர் நிழலின்கண்
கொடுத்தும், ஓடைபடுத்தியும் பகைசாயவே வந்தவேடர் - சோழனை மடுவில்
வீட்டியும் பகைவர் புறங்கொடுக்குமாறு வந்த திருவேடத்தையுடைய
அச்சோமசுந்தரக்கடவுள், அவ்வண்ணமே ஒரு மானவேடு அரசாய் -
அங்ஙனமே ஒரு பெருமையையுடைய வேட மன்னராய் (வந்து), வலம் சிந்த
ஆகுலம் மூழ்கும் - வெற்றி அழிந்ததால் துன்பக் கடலுள் மூழ்கிய, மீனவன்
சேனை காவலர் ஆயினார் - பாண்டியனது சேனைக்குத் தலைவர் ஆயினர்.

     புனல் பந்தர் நீழல் அளித்ததைத் தண்ணீர்ப்பந்தல் வைத்த
படலத்திலும், ஓடைபடுத்தியதைச் சோழனை மடுவில் வீட்டிய படலத்திலும்
காண்க. வேடமுடையர் என்றும் வேட்டுவர் என்றும் இருபொருள்பட ‘வந்த
வேடர்’ என்றார்; சோழனை மடுவில் வீட்டியபொழுது இறைவன்
வேட்டுருக்கொண்டு வந்தமை காண்க; அதுபற்றியே இங்கு ‘இவ்வண்ணமே
யொருமான வேடரசாய்’ என்றார். (20)

        (அறுசீரடி யாசிரிய விருத்தம்)
குன்றவில் வேடன் சாபங் குழைவித்துச் சுந்த ரேசன்
என்றதன் னாமந் தீட்டி யிட்டகூர்ங் கணைக டூண்டி
வென்றன மென்று வாகை மிலைந்துவெண் சங்க மார்த்து
நின்றவன் சேனை மீது நெறிப்படச் செலுத்தா நின்றான்.

     (இ - ள்.) குன்ற வில் வேடன் - மேருமலையை வில்லாகவுடைய
இறைவனாகிய வேடன், சாபம் குழைவித்து - வில்லைவளைத்து; சுந்தரேசன்
என்ற தன் நாமம் தீட்டியிட்ட கூர்ங்கணைகள் - சுந்தரேசன் என்ற தனது
திருப்பெயர்தீட்டிய கூரிய கணைகளை, வென்றனம் என்று வாகைமிலைந்து
- வென்றுவிட்டோமென்று கருதி வெற்றிமாலைசூடி, வெண்சங்கம் ஆர்த்து -
வெள்ளிய சங்கினைமுழக்கி, நின்றவன் சேனைமீது - நின்ற விக்கிரமசோழன்
சேனையின்மேல், நெறிப்படத் தூண்டிச் செலுத்தா நின்றான் - வரிசைபடத்
தொடுத்துவிடாநின்றான்.

     வேடன் கணைகளை நின்றவன் சேனைமீது செலுத்தாநின்றான் என
முடிக்க. (21)


     (பா - ம்.) * மீனவர். நூறு நூறு.