திருமேனி, என்று இவ்வாறுணர்ந்து
புறமாகிய காயத் தொழிலானும் அகத்
தொழிலானும் விதித்தவாறே வழிபடுதல்; யோகம் - அஃது அடிப்பட்டு
வரவர நிகழும் பக்குவ விசேடத்தால் அதி நுட்ப வுணர்வுடையராய்
நிட்களமாகிய அதிசூக்கும வடிவமே பொருள், சகளமும் சகள நிட்களமும்
அதனை வழிபடுதற்கிடமாகிய திருமேனிகள் என்று இவ்வாறுணர்ந்து
அகத்தொழின் மாத்திரையால் விதித்தவாறே வழிபடுதல்; ஞானம் - மூன்றும்
இவ்வாறு முறையே அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ முதிர்ச்சியானே
உள்ளவாறு உணர்வு விளங்கி எங்கு நிறைந்த சச்சிதானந்தப் பிழம்பே
சொரூபம், ஏனைச் சகளம் முதலிய மூன்றும் தூலாருந்ததி நியாயமாக
அதனை உணர்தற்பொருட்டும் வழிபடுதற்பொருட்டும் கொண்ட
திருமேனிகள், என்றிவ்வாறுணர்ந்து காயத்தொழில் மனத்தொழில்
இரண்டனையும் கைவிட்டு, கேட்டல் முதலிய அறிவுத் தொழின்
மாத்திரையால் வழிபடுதல்; இன்னும் இவற்றின் விரிவைச் சிவஞான
போத மாபாடியத்துட் காண்க. (36)
சரியை வல்லமெய்த்
தொண்டருஞ் சம்புவுக் கினிய
கிரியை செய்யுநன் மைந்தருங் கிளர்சிவ யோகந்
தெரியுஞ் சாதகக் கேளிருந் தேசிகத் தன்மை
புரியும் போதகச் செல்வரு மளவிலர் பொலிய. |
(இ
- ள்.) சரியை வல்லமெய்த் தொண்டரும் - சரியையில் வல்ல
உண்மைத் தாதமார்க்கத்தினரும், சம்புவுக்கு இனிய கிரியை செய்யும்
நல்மைந்தரும் - இறைவனுக்கு இனிய கிரியையினைச் செய்யும் நல்ல புத்திர
மார்க்கத்தினரும், கிளர் சிவயோகம் தெரியும் சாதகக் கேளிரும் - விளங்கா
நின்ற சிவயோகத்தினை அறியுஞ் சாதனையையுடைய சகமார்க்கத்தினரும்,
தேசிகத்தன்மை புரியும் போதகச் செல்வரும் அளவிலர் பொலிய -
ஞானாசிரியத் தன்மையைச் செய்யும் ஞானச் செல்வராகிய
சன்மார்க்கத்தாருமாகிய அளவிறந்தவர்கள் விளங்கவும்.
மேற்பாட்டிலே
நாற்பாதத்தையும் ஆராய்ந்த மாணாக்கரைக் கூறி,
இப்பாட்டில் அவற்றில் வல்லரா யொழுகுவாரைக் கூறினார். சரியை முதலிய
நான்கும் முறையே தாதமார்க்கம், புத்திர மார்க்கம், சகமார்க்கம்,
சன்மார்க்கம் எனவும் பெயர் பெறும் எனவும், அந்நெறிகளில் நிற்பார்
தொண்டர், மைந்தர், சாதகர், போதகர் எனப் பெயரெய்துவார் எனவும்,
அவரெய்தும் பயன் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும்
பதமுத்தி பரமுத்திகளுமாம் எனவும் கொள்க; இவற்றினியல்பைச் சிவஞான
சித்தியார் எட்டாஞ் சூத்திரத்தும், இப்புராணத்து வரகுணனுக்குச்
சிவலோகங்காட்டிய படலத்தும் காண்க;
"அழிவி லானுரை
யாகம மிலக்கமாய்ந் தவற்றுள்
விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியைத்
தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசங்
கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால்" |
|