வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்211



என்னும் நகரப்படலச் செய்யுளும் இங்கு நோக்கற் பாலது. கேளிர் - சகர்,
தோழர். (37)

ஒழித்த நோன்பின ராடலர் பாடல ருலகம்
பழித்த செய்கைய ரழுகையர் நகையினர் பாசங்
கழித்த கண்ணினா லரனுருக் கண்டுகொண் டுலகில்
விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்.

     (இ - ள்.) ஒழித்த நோன்பினர் ஆடலர் பாடலர் - விதி விலக்குக்
கடந்த தவத்தினை யுடையராய் ஆடியும் பாடியும், உலகம் பழித்த
செய்கையர் - உலகத்தாராற் பழிக்கப்படுஞ் செய்கையையுடையராய்,
அழுகையர் நகையினர் - அழுகையை யுடையராய் நகையினை யுடையராய்,
பாசம் கழித்த கண்ணினால் - மலத்தை நீக்கிய ஞானக்கண்ணினால், அரன்
உருக் கண்டுகொண்டு - இறைவன் திருவுருவத்தை இடையறாது தரிசித்துக்
கொண்டு, உலகில் விழித்த கண் குரு டாத்திரி வீரரும் பலர் - உலகின்கண்
திறந்த ஊனக்கண் குருடாகத் திரிகின்ற வீரரும் பலர்.

     பசுகரணம் பதிகரணமாக நிகழப் பெற்றுத் தற்செய லிழப்பினின்று
செய் வனயாவும் அவர்க்குத் தவமா மென்பார் ‘ஒழித்த நோன்பினர்’
என்றார்;

"சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்"

என்னும் திருவாசகத்தைச் சிந்திக்க. சிவானந்த மேலீட்டால் ஆடல் பாடல்
செய்வர். இவர்கள் அறிவொழியும் பாலர் குணத்தையும், ஒருகாற் செய்து
ஒருகாலிழக்கும் உன்மத்தர் குணத்தையும், செயலிழப்பினின்றும் செய்யும்
பிசாசர் குணத்தையும் பொருந்தினவராகலின் ‘உலகம் பழித்த செய்கையர்
அழுகையர் நகையினர்’ எனப்பட்டார். "பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர்
பரமே பார்த்திருப்பார் பதார்த்தங்கள் பாரார்" என்றபடி, உலகப் பொருளை
முன் நோக்கி யாங்கு நோக்கி நிற்பினும் அப்பொருள் அதற்குத் தோன்றா
திருத்தலின் ‘விழித்த கண் குருடா’ என்றார். பாசம் கழித்த கண் -
ஞானக்கண். விழித்த கண் - ஊனக்கண்.

     இது முதல் மூன்று செய்யுட்களால் சன்மார்க்கருள் ஞான நிட்டை
யடைந்தா ரியல்புகள் கூறப்படுகின்றன. (38)

கரவி லுள்ளமாம் விசும்பிடைக் காசற விளங்கும்
பரசி லாச்சுடர்க் குதயமீ றின்மையாற் பகலும்
இரவு நேர்படக் கண்டில ரியன்றுசெய் நித்த
விரத மாதிநோன் பிழந்துறை விஞ்சையர் பலரால்.

     (இ - ள்.) கரவு இல் உள்ளமாம் விசும்பிடை - கள்ளமில்லாத
உள்ளமாகிய ஆகாயத்தில், காசு அற விளங்கும் பரசு இலாச் சுடர்க்கு -
களங்க மின்றி விளங்கா நின்ற மழுவில்லாத சிவ சூரியனுக்கு, உதயம் ஈறு