212திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



இன்மையால் - தோற்றமும் மறைவும் இல்லையாகையால், பகலும் இரவும்
நேர்படக் கண்டிலர் - பகலும் இரவுந் தோன்றக் காணாதவராய், இயன்று
செய் நித்த விரதம் ஆதி நோன்பு இழந்து உறை - மனம் பொருந்திச்
செய்யும் நாட் கடன் முதலிய தவங்கள் நெகிழ்ந் தொழியப் பெற்று
உறைகின்ற, விஞ்சையர் பலர் - ஞானிகளும் பலர்.

     உள்ளம் - ஆன்மா, மனமுமாம். காசு அற என்பதற்கு மலமாசு
நீங்குதலால் என்றுரைத்தலுமாம். கரசரணாதி அவயவமின்றிச்
சுயஞ்சோதியாய்ப் பிரகாசித்தலின் ‘பரசிலாச் சுடர்’ என்றார்; பரசு இன்மை
கூறவே கரம் முதலியன இன்மை பெற்றாம். பகல் இரவு என்பதற்குச் சகல
கேவலமும், நாட் கூறாகிய பகல் இரவும் பொருளாகக் கொள்க;
அவ்விரண்டுங் காணாமையாவது சாக்கிரத்தே நின்மல துரியா தீதத்தைப்
பொருந்தி நிற்றல். நித்தமாதி விரதம் - ஞானத்திற்குக் காரணமாகக் கன்ம
காண்டம் பற்றிச் செய்யப்படும் கிரியைகள்; அவை "உறங்கினோன் கை
வெறும் பாக்கென" த் தாமே தவிரவேண்டு மெனச் சங்கற்ப நிராகரணத்துள்
ஓதுதலின் ‘நோன்பிழந்துறை’ என்றார். விஞ்சையர் - ஞானிகள்.
இச்செய்யுட்களின் கருத்தை,

"ஞாலமதின் ஞானநிட்டை யுடையோருக்கு
     நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை
சீலமிலை தவமில்லை விதரமொ டாச்சிரமச்
     செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை
கோலமிலை புலனில்லை கரண மில்லை
     குணமில்லை குறியில்லை குலமு மில்லை
பாலருட னுன்மத்தர் பிசாசர்குண மருவிப்
     பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்"

என்னும் சிவஞான சித்தியாரத் திருவிருத்தத்தால் நன்கு தெளிக. (39)

உடையுங் கோவண முண்டியுங் கைப்பலி யுறவென்
றடையுங் கேளிரு மரனடி யார்கண்டி கலன்கண்
படையும் பாரிட மாயினும் பகலிரா முதலீ
றிடையின் றாமிடத் துறங்குவ திஃதவர் வாழ்க்கை.

     (இ - ள்.) உடையும் கோவணம் - ஆடையுங் கோவணமே; உண்டியும்
கைப்பலி - உணவும் கையிலேற்கும் பலியே; உறவு என்று அடையும்
கேளிரும் அரன் அடியார் - உறவினர் என்று அடையுஞ் சுற்றத்தாருஞ்
சிவனடியார்களே; கலன் கண்டி - அணிகலனும் உருத்திராக்க மாலையே;
கண்படையும் பாரிடம் - துயிலுமிடமும் நிலமே; ஆயினும் - ஆனாலும்,
உறங்குவது - இவர்கள் தூங்குவது; பகல் இராமுதல் இடைஈறு இன்றாம்
இடத்து - பகலும் இரவும் முதலும் நடுவும் முடிவுமில்லாத இடத்தின்கண்;
இஃது அவர் வாழ்க்கை - இஃதே அவர் வாழ்க்கையாகும்.