218திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



எனவும் அடிகள் திருவம்மானையில் அருளிச் செய்தலா னறியப்படும்.
இன்பவெள்ளம் உண்ணிறைந்து புறங்கசிவதுபோல ஞானமயமான மொழிகள்
நாவில் வெளிவரலாயின வென்க. (48)

தொழுத கையினர் துளங்கிய முடியினர் துளும்ப
அழுத கண்ணினர் பொடிப்புறு மியாக்கையர் நாக்குத்
தழுத ழுத்தவன் புரையினர் தமையிழந் தழல்வாய்
இழுதை யன்னமெய் யினர்பணிந் தேத்துவா ரானார்.

     (இ - ள்.) தொழுத கையினர் துளங்கிய முடியினர் -
கூப்பியகையினராய் நடுங்கிய தலையினராய், துளும்ப அழுத கண்ணினர் -
நீர் ததும்ப அழுத கண்ணினராய், பொடிப்புறும் யாக்கையர் - புளகித்த
உடலை யுடையவராய், நாக்குத் தழுதழுத்த அன்பு உரையினர் - நாத்
தழுதழுத்த அன்பு மொழி யினராய், தமை இழந்து - சீவபோதத்தை இழந்து,
அழல்வாய் இழுதை அன்ன மெய்யினர் - நெருப்பிற்பட்ட நெய்போன்ற
உடலை யுடையராய், பணிந்து ஏத்துவார் ஆனார் - வணங்கித்
துதிப்பாராயினர்.

     கையினர் முதலிய குறிப்பு முற்றுக்கள் எச்சமாயின. தலையன்பின்
செய்கைகள் இதிற் கூறப்பட்டன.

"திருத்திகழ் கவிகைக் கீழுஞ் சிறந்தபொற் சிவிகை மேலும்
வரத்திரு மேவு தானை மன்னவ னென்ன வந்தார்
உருத்தெரி யாத நீறுங் கோவண வுடையுங் குஞ்சி
விரித்துள சிரமுங் கண்ணீர் மிகப்பொழி விழியு மானார்"

"அன்புட னோக்கி நிற்ப ரழுவர்கை தொழுவர் வீழ்வர்
இன்புற வெழுவர் பின்பா லேகுவ ரிரங்கி மீள்வர்
நன்பகல் கங்குல் காணார் ஞானநல் லறிவே கொண்டு
கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார்"

எனவரும் திருவாதவூரர் புராணச் செய்யுட்கள் நோக்கற்பாலன. (49)

பழுதி லாதசொன் மணியினைப் பத்திசெய் தன்பு
முழுது மாகிய வடத்தினான் முறைதொடுத் தலங்கல்
அழுது சாத்துமெய் யன்பருக் ககமகிழ்ந் தையர்
வழுவி லாதபேர் மாணிக்க வாசக னென்றார்.

     (இ - ள்.) பழுது இலாத சொல் மணியினை - குற்றமற்ற சொல்லாகிய
மாணிக்கங்களை, பத்தி செய்து - வரிசைப் படுத்தி, அன்பு முழுதும் ஆகிய
வடத்தினால் முறை தொடுத்த அலங்கல் - முற்றும் அன்பாகிய நாணினால்
முறையாகக் கோத்த மாலையை, அழுது சாத்தும் மெய் அன்பருக்கு -
அழுது சூட்டிய உண்மை அன்பராகிய அவ்வாதவூரருக்கு, ஐயர் அகமகிழ்ந்து
- ஆசிரியர் மனமகிழ்ந்து, வழு இலாதபேர் மாணிக்க வாசகன் என்றார் -
குற்றமில்லாத பெயர் மாணிக்கவாசகன் என்று கூறியருளினார்.