222திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



"பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட"

எனவும்

"உருநா மறியவோ ரந்தணனா யாண்டுகொண்டான்"

எனவும் அடிகள் திருவாசகத்தில் அருளிச்செய்தலும் காண்க. நீத்ததை ஐ சாரியை. (54)

வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய்
     மடுக்கிலேன் வரையுருண்டு மாய்ப்பே னல்லேன்
நஞ்சொழுகு வாளாலுங் குறைப்பே னல்லே
     னாதனே யதுவுநின துடைமை யென்றே
அஞ்சினேன் றானேயு மழியா தாவி
     யையனே நினைப்பிரிந்து மாற்ற கில்லேன்
என்செய்கோ வெந்தாயோ வெந்தா யோவென்
     றிரங்கினார் புரண்டழுதா ரினைய சொல்வார்.

     (இ - ள்.) வஞ்சவினைக் கொள்கலனாம் உடலை - வஞ்சமுடைய வினைகள் நிறைந்த பண்டமாகிய இவ்வுடலை, தீவாய் மடுக்கிலேன் - நெருப்பின்கண் வீழ்த்திலேன்; வரை உருண்டு மாய்ப்பேன் அல்லேன் - மலையினின்று உருண்டு மாய்ப்பேனல்லேன்; நஞ்சு ஒழுகு வாளாலும் குறைப்பேன் அல்லேன் - நஞ்சு ஒழுகும் வாளினாலும் சேதிப்பேனல்லேன்; நாதனே - இறைவனே, அதுவும் நினது உடைமை என்றே அஞ்சினேன் - அவ்வுடலும் உனது உடைமை யெனக்கருதி அதனைக்கொல்ல அஞ்சினேன்; ஆவி தானேயும் அழியாது - உயிர் தானேயும் அழியாது; ஐயனே - தலைவனே, நினைப்பிரிந்தும் ஆற்றகில்லேன் - நின்னைப்பிரிந்தும் பொறுக்ககில்லேன்; எந்தாயோ எந்தாயோ என் செய்கோ என்று இரங்கினார் - எந்தாயோ எந்தாயோ யான் என்ன செய்வேனென்று புலம்பி, புரண்டு அழுதார் இனைய சொல்வார் - புரண்டு அழுது இத்தன்மையனவற்றைக் கூறுவாராயினர்.

     கொள்கலன் - பாண்டம்; மரக்கலமுமாம். வாளுக்கு நஞ்சு பூசுதலுண்டாகலின் ‘நஞ்சொழுகு வாள்’ என்றார். உடலைத் தீவாய் மடுக்கிலேன் என்பது முதலிய கருத்துக்களை,

"ஓய்விலாதன வுவமணி லிறந்தன வொண்மலர்த் தாடந்து
     நாயிலாகிய குலத்தினுங் கடைப்படு மென்னை நன்னெறிகாட்டித்
தாயிலாகிய வின்னருள் புரிந்தவென் றலைவனை நனிகாணேன்
     தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன் செழுங்கடல்
புகுவேனே"

எனவும்,
    "அறுக்கிலேனுடல் துணிபடத்தீப்புக் கார்கிலேன்றிரு
    வருள்வகை யறியேன்