228திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஒன்றுங்கூறா திருந்தனன்; நிரை செய்தார்ப்பரிவரவினை நோக்கிய நிருபன் -
வரிசைப்படுத்திய கிண்கிணி மாலையையணிந்த குதிரைகளின் வரவினை
எதிர்பார்த்திருக்கும் அப்பாண்டியன்.

     புரசை - யானைக்கழுத்திடு கயிறு. யானை வீரரும், குதிரை வீரரும்,
தேர் வீரரும் போய் என்க. இரை, முதனிலைத்தொழிற் பெயர். இறைஞ்சினார்,
உரைத்திலன் என்பன முற்றெச்சங்கள். நிருபன் உரைத்திலன் இருந்தான் என
முடிக்க. (62)

வள்ளல் வாதவூர் முனிகளு மன்னவன் பரிமாக்
கொள்ள நல்கிய பொருளெலாங் குருந்தில்வந் தாண்ட
பிள்ளை வாண்மதிச் சடைமுடிப் பெருந்துறை மறையோர்க்
குள்ள வாதரம் பெருகமுன் வேண்டியாங் குய்ப்பார்.

     (இ - ள்.) வள்ளல் வாதவூர் முனிகளும் - வள்ளலாகிய
வாதவூரடிகளும,் மன்னவன் - அரிமருத்தன பாண்டியன், பரிமாக்கொள்ள
நல்கிய பொருள் எலாம் - குதிரை வாங்கக்கொடுத்த பொருள் முழுதையும்,
குருந்தில் வந்து ஆண்ட - குருந்த மரத்தின் அடியில் வந்து ஆண்டருளிய
பிள்ளைவாள் மதிச்சடைமுடி - ஒள்ளிய குழவித்திங்களைத்தரித்த
சடைமுடியினை யுடைய, பெருந்துறை மறையோர்க்கு - பெருந்துறையில்
எழுந்தருளிய அந்தணராகிய சிவபெருமானுக்கு, உள்ள ஆதரம் பெருக -
உள்ளன்பு பெருக, முன் வேண்டியாங்கு உய்ப்பார் - முன் வேண்டிக்
கொண்டது போலவே செலுத்துவாராயினர்.

     சடை முடிப்பெருந்துறை மறையோர்க்கு என்பதற்குச்
சடாமுடியையுடைய பெருமானாரெழுந்தருளிய திருப்பெருந்துறையிலுள்ள
ஆதிசைவராகிய அந்தணர்களுக்கு எனப் பிறர் கூறியபொருள் சிறிதும்
பொருந்தாமை காண்க. முன் வேண்டி யாங்கு - ‘இப்பொருளெலாம்
உனக்கும் ஐம்பொறியும் வென்று வேண்டும் நின்னன்பர்க்கும் ஆக்குக’ என
மேல் வேண்டியவாறு. உய்த்தல் - செல விடுதல். (63)

சிறந்த பூசைக்குந் திருவிழாச் சிறப்புக்குஞ் செல்வம்
நிறைந்த வாலயத் திருப்பணித் திறத்துக்கு நிரப்பி
அறந்த வாதபே ரன்பர்க்குஞ் செலுத்தியத் தலத்தே
உறைந்த வாவற வின்னண மொழுகுநாள் கழிப்பார்.

     (இ - ள்.) சிறந்த பூசைக்கும் திருவிழாச் சிறப்புக்கும் - சிறப்புடைய
பூசனைக்கும் திருவிழாவாகிய சிறப்புக்கும், செல்வம் நிறைந்த
ஆலயத்திருப்பணித் திறத்துக்கும் - செல்வம் நிறைந்த திருக்கோயிலின்
திருப்பணி வகைக்கும், நிரப்பி - நிரம்பக்கொடுத்து, அறம்தவராதபேர்
அன்பர்க்கும் செலுத்தி - அறநெறியினின்று நீங்காத பெரிய அன்பர்கட்கும்
செலவிட்டு, அத்தலத்தே உறைந்து - அப்பதியின் கண் உறைந்து, அவா
அற - அவா என்பதின்றி, இன்னணம் - இவ்வாறு, ஒழுகு நாள் கழிப்பார் -
செல்லும் நாட்களைக் கழிப்பாராயினர்.