வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்229



திருவிழா சிறப்பெனப் படுதலை,
"சிறப்பொடு பூசனை செல்லாது"

என்னுந் திருக்குறளாலறிக; நித்தத்திற் றாழ்வு தீரச் செய்யப் படுதலின்
நைமித்திகம் சிறப்பு எனப்படும். (64)

எல்லை கூறிய குளிர்மதி யடுக்கவந் தெய்த
மல்லல் யானையா னின்னமும் வயப்பரி வந்த
தில்லை யாலிது வென்னென வோலையு மெழுதிச்
செல்ல வுய்த்தனன் வாதவூ ரமைச்சர்தந் திருமுன்.

     (இ - ள்.) எல்லை கூறிய குளிர்மதி அடுக்க வந்து எய்த -
எல்லையாகக் கூறிய ஆடித் திங்கள் பொருந்த வந்து அடைய, மல்லல்
யானையான் - மதவள முடைய யானையை யுடைய பாண்டியன். இன்னமும்
வயப்பரி வந்தது இல்லை - இன்னும் வெற்றி பொருந்திய குதிரைகள்
வரவில்லை; இது என் என ஓலையும் எழுதி - இதற்குக் காரணம் என்ன
வென்று ஓலையும் வரைந்து, வாதவூர் அமைச்சர் தம் திருமுன் செல்ல
உய்த்தனன் - வாதவூரராகிய அமைச்சரின் திரு முன்னர்ச் செல்ல
விடுத்தான்.

     குளிர்மதி - கடகமாதம். ஆடித்திங்கள்; குளிர் - ஞெண்டு; கற்கடகம்.
இல்லையால், ஆல் அசை. வாத வூரராகிய அமைச்சர் என விரிக்க;
வாதவூரிற் றோன்றியவராகிய அமைச்சர் என்றுமாம். (65)

மன்ன வன்றிரு முகங்கண்டு முறைமையால் வாங்கி
அன்ன வாசகந் தெரிந்துகொண் டாதியீ றில்லா
முன்ன வன்றிரு வருட்கடன் மூழ்கிய முனிவர்
என்னை வேறினிச் செய்யுமா றென்றுநின் றயர்வார்.

     (இ - ள்.) மன்னவன் திருமுகம் கண்டு - பாண்டியனது ஓலையைப்
பார்த்து, முறைமையால் வாங்கி - முறைப்படி வாங்கி, அன்ன வாசகம்
தெரிந்து கொண்டு - அதிலுள்ள வாசகத்தைத் தெரிந்து கொண்டு, ஆதிஈறு
இல்லா முன்னவன் - முதலு முடிவு மில்லாத முன்னவனாகிய இறைவனது,
திருவருட் கடல் முழ்கிய முனிவர் - திருவருட் கடலுள் மூழ்கிய
முனிவராகிய மணிவாசகனார், என்னை வேறு இனிச் செய்யுமாறு என்று
நின்று அயர்வார் - இனிச் செய்யும் வழி வேறு என்னை யெனக் கருதி
நின்று சோர்வாராகி.

     திருமுகவாசகம் வாதவூரடிகள் புராணத்தில்,

"தென்னவ னரச னோலை தென்னவன் பிரம ராயன்
என்னுநல் லமைச்சன் காண்க வெல்லையி றனங்கொண் டேகிக்
கொன்னுறு பரிகொ ளாமற் கோவணங் கொண்டீ ரீது
மன்னர்தங் கருமஞ் செய்வார் வண்மையென் றுவகை யுற்றேம்."