தீர்ந்தேம் - பயனற்ற
இவ்வுடம்பின் பற்றையும் நீங்கினேம்; வெறுக்கை மேல்
வெறுக்கை வைத்தேம் - பொருளின் மேல் வெறுப்புவைத்தேம்; செற்றமும்
செருக்கும் காய்ந்தேம் சினத்தையும் மதத்தையும் சினந்து போக்கினேம்;
இரண்டும் தீர்ந்தேம் - கொடிய நல்வினை தீவினை என்னும்
இரண்டினின்றும் நீங்கினேம்.
மேற்செய்யுளில்
கிளைஞர் முதலானோரைக் காக்கவேண்டும் குறிப்பிலீர்
போலும் என்றதை அநுவதித்து சுற்றமுந் தொடர்புநீத்தேம் என்றார்.
தொடர்பு - நட்டோர், சார்வுளோர், சான்றோர் என்னும் தொடர்புகள். இனி,
காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், உவகை, மதம், மானம் என்னும் உட்பகை
ஆறும் ஒழிந்தவாறுரைத்தலும் ஊன்றியுணர்க. வெறுக்கை இரண்டனுள்
முன்னது செல்வம்; யாவும் வந்து செறிதலின் வெறுக்கை யெனப்பட்டது;
வெறுத்தல் - செறிதல். பின்னது உவர்த்தல் என்னும் பொருட்டாய
தொழிற்பெயர். தீமையுடைய இருவினையும் என்க. நல்வினையும்
பிறவிக்கேதுவாகலின் வினையிரண்டும் என்றார்;
"இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு" |
என்னும் தமிழ்
மறையுங் காண்க. (83)
தந்தைதாய்
குரவ னாசான் சங்கர னிராசை பெண்டீர்
மைந்தர்பல் லுயிருஞ் சுற்ற மாசிலா வீச னன்பர்
அந்தமில் பிறவி யேழு மடுபகை யென்ப தோர்ந்தேம்
எந்தையார் கருணை காட்டி யெம்மையாட் கொண்ட வன்றே. |
(இ
- ள்.) எந்தையார் கருணை காட்டி எம்மை ஆட்கொண்ட
அன்றே - எமது பெருமானார் தமது அருட்கோலம் காட்டி எம்மை அடிமை
கொண்டருளிய அப்பொழுதே, தந்தை தாய் குரவன் ஆசான் சங்கரன் -
அப்பனும் அம்மையும் ஞானாசிரியனும் போதகாசிரியனும் அவ்விறைவனே
என்பதையும், பெண்டீர் நிராசை - மனைவி நிராசையே என்பதையும்,
மைந்தர்பல் உயிரும் - மக்கள் பல உயிர்களுமே என்பதையும், சுற்றம் மாசு
இலாஈசன் அன்பர் - சுற்றத்தார் குற்றமில்லாத சிவனடியாரே என்பதையும்,
அடுபகை - கொல்லும்பகை, அந்தம் இல்பிறவி ஏழும் என்பது -
முடிவில்லாத எழுவகைப் பிறப்புமே என்பதையும், ஓர்ந்தேம் - அறிந்தேம்.
ஞான
குரவனும் வித்தியா குரவனும் என்பார் குரவனாசான் என்றார்.
எண்ணிடைச் சொற்கள் தொக்கன. கருணை திருவுருவை உணர்த்தி நின்றது.
நிராசையே பெண்டிரும் மைந்தரும் பல்லுயிருமெனக் பிறர் கூறிய உரை
சிறிதும் பொருந்தாமை யுணர்க. என்பது என்னுஞ் சொல்லைத் தனித்தனி
கூட்டி முடிக்க. (84)
|