வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்241



     (இ - ள்.) இறக்கினும் இன்றே இறக்குக - (ஆதலால்) இறந்தாலும்
இன்றே இறக்கக்கடவேம்; என்றும் இருக்கினும் இருக்குக - அன்றி
எப்பொழுதும் அழியாமல் இருந்தாலும் இருக்கக் கடவேம்; வேந்தன்
ஒறுக்கினும் ஒறுக்க - மன்னன் தண்டித்தாலும் தண்டிக்கக்கடவன்; உடனே
உவகையும் ஊட்டினும் ஊட்டுக - உடனே மகிழ்ச்சியை ஊட்டினும்
ஊட்டக்கடவன்; வானில் சிறக்கினும் சிறக்க - விண்ணுலகிற் சென்று
சிறப்புப்பெறினும் பெறக்கடவேம்; கொடிய தீநரகில் சேரினும் சேருக -
(அன்றி) கொடிய நெருப்புமயமாகிய நிரயத்தின் கண் சேர்ந்தாலுஞ்
சேரக்கடவேம்; சிவனை மறக்கிலம் - சிவபெருமானை மறக்கமாட்டேம்;
பண்டைப் பழவினை விளைந்தால் - முன்செய்த பழவினை வந்து விளையின்,
மாற்றுவார்யார் என மறுத்தார் - அதனை மாற்றவல்லார் யாவருளர் என்று
மறுத்துக்கூறினர்.

     இறக்குக, இருக்குக என்பவற்றிற் குகரம் விரிந்து நின்றது. உவகையும்
என்பதில் உம் அசை. இறைவன் பழவினைப் பயனை நுகர்விக்குங்கால்
அதற்கு அமைந்து நுகர்தலன்றி மாற்றுதல் கூடாதாகலின் ‘பழவினை
விளைந்தால் மாற்றுவார் யார்’ என்றார். என என்பதனைச் ‘சுற்றமுந்
தொடர்பும்’ என்பது முதலிய செய்யுட்களின் வினைகளோடும் கூட்டி,
மறுத்தார் என முடிக்க. அடிகள் தற்சுதந்தரமின்றி இறைவனருள் வழிப்பட்டு
நிற்கும் பெற்றியை,

"நகரம் புகினும், எள்ளேன் றிருவருளாலே யிருக்கப் பெறின்"
"நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே"
"காயத்திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே"

     என்னும் திருவாசகங்களிற் காண்க (86)

                     ஆகச் செய்யுள் - 2, 798.