சுந்தரப் பேரம்பெய்த படலம் 25



யானைகளை அழித்தான்; ஆயிரம் வாளியால் நூறாயிரம் தேரைச்
சாய்த்தான் - ஆயிரம் அம்புகளினால் நூறாயிரந்தேர்களை உடைத்தான்;
ஆயிரம் வாளியால் நூறாயிரம் பேரைத் தேய்த்தான் - ஆயிரம்
பாணங்களால் நூறாயிரம் வீரர்களைத் தொலைத்தான்.

     இம்மூன்று செய்யுளிலும் இறுதிச் சீர்கள் இவ்விரண்டு ஒவ்வோ
ரெதுகையாக அமைந்திருத்தல் காண்க. (29)

தடிந்தன தோளுந் தாளுந் தகர்ந்தன சென்னி மண்ணிற்
படிந்தன மடிந்தோர் யாக்கை பரிந்தன தும்பைத் தாமம்
மடிந்தன மையல் யானை மாண்டன தாண்டும் பாய்மான்
ஒடிந்தன கொடிஞ்சி மான்றே ரொதுங்கின வொழிந்த சேனை.

     (இ - ள்.) தோளும் தாளும் தடிந்தன - வீரர்களின் தோள்களும்
கால்களும் அறுபட்டன; சென்னி தகர்ந்தன - தலைகள் உடைபட்டன;
மடிந்தோர் யாக்கை மண்ணில் படிந்தன - இறந்தவர்களின் உடல்கள்
மண்ணிற் கிடந்தன; தும்பைத்தாமம் பரிந்தன - தும்பைமாலைகள் அறுந்தன;
மையல் யானை மடிந்தன - மதமயக்கத்தையுடைய யானைகள் மடிந்தன;
தாண்டும் பாய்மான் மாண்டன - தாவுங்குதிரைகள் இறந்தன; கொடிஞ்சி
மான் தேர் ஒடிந்தன - மொட்டையுடைய குதிரை பூண்ட தேர்கள்
நொறுங்கின; ஒழிந்த சேனை ஒதுங்கின - எஞ்சிய சேனைகள் ஓடி
மறைந்தன.

     தும்பைத்தாமம் வலிமை காட்டுதலே பொருளாகப் பொருவார்
சூடுவது. தாண்டும் என முன் வந்தமையால் பாய்மான் என்றது பெயர்
மாத்திரையாக நின்றது. ஒழிந்த - இறவாது எஞ்சிய. (30)

ஆவிமுன் னேகத் தாமு மருக்கமண் டலத்தா றேகத்
தாவுவ வென்ன வாடுந் தலைபல சிலைவாள் * பட்டுக்
கூவிளி யெடுத்து வீழுங் குறைத்தலை யாடப் பாதிச்
சாவுட னின்று கைகள் கொட்டுவ தாள மென்ன.

     (இ - ள்.) ஆவி முன் ஏக - உயிர் முன்னே செல்ல, தாமும்
அருக்க மண்டலத்து ஆறு ஏகத்தாவுவ என்ன - தாமுஞ் சூரிய
மண்டலத்தின் வழியாகப்போதற்குத்தாவுதல் போல, பல தலை ஆடும் -
பல தலைகள் ஆடா நிற்கும்; சிலைவாள் பட்டு கூவிளி எடுத்து வீழும் -
வாளிகளும் வாளும் பட்டுக்கூவும் ஓசையைச் செய்து வீழ்கின்ற, குறைத்தலை
ஆட - கவந்தங்கள் ஆடாநிற்க, பாதிச்சாவுடல் நின்று தாளம் என்ன
கைகள் கொட்டுவ - குற்றுயிரோடு கூடிய உடல்கள் நின்று தாளம்
போடுதல் போலக்கைகளைக் கொட்டுவன.

     போரில் உயிர் துறந்தோர் சூரியமண்டல வழியாக வீரசுவர்க்கம்
எய்துவர் என்ப. கூவிளி - கூவும் ஓசை. குறைத்தலை - தலையற்ற
உடல். (31)


     (பா - ம்.) * சிலவாள். +குறையுடற்கைவேல்