252திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     இருசுடர் - ஞாயிறு திங்கள். இறைவன் எல்லாப் பொருளிலும்
கலந்து நிற்றலின் ‘மண்ணாய் . . . . . இருசுடராய்’ என்றும், எல்லாவற்றையும்
கடந்து நிற்றலின் ‘இத்தனையும் வேறாகி’ என்றுங் கூறினார்.

"பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே"

"வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே"

என்று திருஞான சம்பந்தப்பெருமானஅருளிச்செய்தலுங் காண்க.
எங்கண்ணும், மெலித்தல் விகாரம். உறுகண் - துன்பம். எவ்விடத்தும்
கண்ணுடைய நீ எனது துன்பத்தைக் காணாவாறென்னை யென்றார். (21)

பொங்குஞ் சினமடங்கல் போன்றுருத்து வெங்கூற்றம்
அங்கும் புரியா வருந்துன்பத் தாழ்ந்துநான்
மங்கும் படியறிந்தும் வந்தஞ்ச லென்கிலையால்
எங்குஞ் செவியுடையாய் கேளாயோ வென்னுரையே.

     (இ - ள்.) வெங்கூற்றம் - கொடியகூற்றுவன், சினம் பொங்கும்
மடங்கல் போன்று உருத்து - சினமிக்க ஊழித்தீப்போன்று கொதித்து,
அங்கும் புரியா அரும்துன்பத்து - அவனுலகத்துஞ் செய்யாத
பொறுத்தற்கரிய துன்பக்கடலுள், நான் ஆழ்ந்து மங்கும்படி அறிந்தும் -
அடியேன் அழுந்தி மங்குந்தன்மையை அறிந்து வைத்தும், வ்நது அஞ்சல்
என்கிலை - வந்து அஞ்சாதே என்றருளிச் செய்கிலை; எங்கும் செவி
உடையாய் - எங்குங்காதுடையவனே, என் உரை கேளாயோ - எனது
முறையீட்டினைக் கேட்டருளாயோ.

     மடங்கல் - ஊழித்தீ; சிங்கமுமாம். மங்குதல் - மாழ்குதல். "எங்கும்
கண்ணையும் முகத்தையும், எங்கம் கையையும், எங்கும் அடியையும்
உடையராய், தமது கரங்களினாலும் சிறகுகளினாலும் மண்ணையும்
விண்ணையும் இயைத்துப் படைப்பவர் அந்தக் கடவுள் ஒருவரே" என
இருக்கு மறை கூறுதலின் ‘எங்கண்ணும் கண்ணானாய்’ என்றும், ‘எங்குஞ்
செவியுடையாய்’ என்றும் கூறினார்.

"எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
     எண்ணில்பல் கோடிதி்ண் டோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
     ஏர்கொண்முக் கண்முக மியல்பும்
எண்ணில்பல் கோடி யெல்லைக்கப் பாலாய்
     நின்றைஞ்ஞூற் றந்தண ரேத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தரேர் வீழி
     யிவர்நம்மை யாளுடை யாரே"

என்னும் திருவிசைப்பாவும் காண்க. (22)