254திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



             [கலிநிலைத்துறை]
என்றி ரங்குவோ ரிரங்கொலி யிளஞ்சிறா ரழுகை
சென்று தாயர்தஞ் செவித்துளை நுழைந்தெனச் செல்லக்
குன்றி ருஞ்சிலை கோட்டிய கூடனா யகன்கேட்
டன்று வன்சிறை நீக்குவான் றிருவுளத் தமைத்தான்.

     (இ - ள்.) என்று இரங்குவோர் இரங்கு ஒலி - என்று கூறி வருந்தும்
வாதவூரடிகளின் முறையீட்டொலி, இளஞ்சிறார் அழுகை சென்று -
இளஞ்சிறுவர்களின் அழுகை ஒலிபோய், தாயர்தம் செவித்துளை
நுழைந்தெனச் செல்ல - தாயாருடைய செவித்துளையின்கண்
நுழைந்தாற்போலத் திருச்செவியின்கண் நுழைய, குன்று இருஞ்சிலை
கோட்டிய - மேரு மலையைப் பெரிய வில்லாக வளைத்த, கூடல் நாயகன்
கேட்டு - கூடல் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுள் அதனைக்கேட்டு,
அன்று வன்சிறை நீக்குவான் திருவுளத்து அமைத்தான் - அப்பொழுது
வலிய சிறையை நீக்குதலைத் திருவுள்ளத்திற் கொண்டருளினான்.

     இரங்கொலி செல்ல நாயகன் கேட்டு உளத்தமைத்தான் என்க.
நுழைந்தென, விகாரம். நீக்குவான் - தொழிற்பெயர். (25)

நந்தி யாதியாம் பெரும்கண நாதரை விளித்தான்
வந்தி யாவரும் பணிந்தனர் மன்னவற் கின்று
முந்தி யாவணி மூலநாள் வந்தது முனிவு
சிந்தி யாமுனம் பரியெலாஞ் செலுத்துவான் வேண்டும்.

     (இ - ள்.) நந்தி ஆதியாம் பெரும்கண நாதரை விளித்தான் -
திருநந்திதேவர் முதலிய பெரியகணத் தலைவர்களை அழைத்தருளினன்;
யாவரும் வந்து பணிந்தனர் - அவரனைவரும் வந்து வணங்கினர்; ஆவணி
மூலநாள் முந்தி வந்தது - ஆவணத்திங்கள் மூலநாள் முற்பட்டே
வந்துவிட்டது; முனிவு சிந்தியாமுனம் - மன்னன் சினத்தல் கருது முன்னரே,
மன்னவற்கு இன்று பரி எலாம் செலுத்துவான் வேண்டும் - அவனுக்கு இன்று
குதிரைகள் அனைத்தையும் செலுத்துதல் வேண்டும்.

     ஆதி என்றதனால் பிருங்கி, மாகாளர் முதலியோர் கொள்க. வந்தி
யாவரும். இகரம் குறுகாது நின்றது. (26)

யாவ ரும்புனத் தியங்குறு நரியெலா மீட்டித்
தாவ ரும்பரி யாக்கியத் தாம்பரி நடாத்துஞ்
சேவ கஞ்செய்வோ ராகிமுன் செல்லுமின் யாமும்
பாவ கம்பட வருதுமப் படியெனப் பணித்தான்.

     (இ - ள்.) யாவரும் - நீவிரனைவரும், புனத்து இயங்குறும் நரி எலாம்
ஈட்டி - காட்டின்கண் உலவும் நரிகளனைத்தையுங் கொண்டு வந்து, தாவு
அரும்பரி ஆக்கி - தாவுகின்ற அரிய குதிரைகளாகச்செய்து, அ தாம்பரி -
நடாத்தும் சேவகம் செய்வோராகி - அத்தாவும் குதிரைகளை நடாத்துகின்ற