258திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



மாண்ட தாரகப் பிரமமாங் கலினம்வாய் கிழியப்
பூண்ட தாற்புறச் சமயமாம் பொருபடை முரிய
மூண்டு போரெதிர் விளைத்திகன் முடிப்பது முளரி
ஆண்ட கோமுக மந்துரை யாகமே வியதால்.

     (இ - ள்.) மாண்டதாரகப் பிரமமாம் கலினம் - மாட்சிமைப்பட்ட பிரணவமாகிய கடிவாளத்தை, வாய் கிழியப்பூண்டது - வாய்கிழியுமாறு பூண்டது; புறச் சமயமாம் - புறச்சமயங்களாகிய, பொருபடை முரிய - போர்செய்யும் படைகள் புறங்கொடுக்குமாறு, மூண்டு எதிர்போர் விளைத்து இகல் முடிப்பது - சினமிக்கு எதிர் நின்று போர் செய்து பகையை முடிப்பது; முளரி ஆண்ட கோ முகம் - தாமரை மலரைத் தவிசாக ஆண்ட பிரமனது நான்கு முகங்களையும், மந்துரையாக மேவியது - பந்தியாகக்கொண்டு பொருந்தியது.

     தாரகப்பிரமம் - எல்லா மந்திரங்கட்கும் ஆதாரமாகிய பிரணவமந்திரம். கோ - பிரமன். (35)

அண்ட கோடிக ளனைத்துமோர் பிண்டமா வடுக்கி
உண்ட நீரதர முதுகின்மே லுபநிடக் கலணை
கொண்ட வாலிய வைதிகப் புரவிமேற் கொண்டான்
தொண்டர் பாசவன் றொடரவிழ்த் திடவருஞ் சோதி.

     (இ - ள்.) அண்டகோடிகள் அனைத்தும் - அண்டகோடிகள் அனைத்தையும், ஓர் பிண்டமா அடுக்கி உண்ட நீரதாம் முதுன்மேல் - ஒரு பிண்டமாக அடுக்கி அமைத்த தன்மையை யுடையதாகிய முதுகின்மேல், உபநிடக்கலணை கொண்ட - மறைமுடிவாகிய கலணையினைக் கொண்ட, வாலிய வைதிகப் புரவிமேற் கொண்டான் - தூய வேதமாகிய குதிரைமேல் ஏறியருளினான்; தொண்டர் பாச வன் தொடர் அவிழ்த்திட வரும் சோதி - அடியாரது பாசமாகிய வலிய கட்டினை அவிழ்க்க எழுந்தருளிவரும் பரஞ்சோதியாகிய கடவுள்.

     உபநிடதம் என்பது உபநிடம் எனத் தொக்கு நின்றது. உபநிடதம் - வேதத்தின் ஞானகாண்டம்; வேத முடிபு. கலணை - குதிரைமேற்றவிசு; சேணம்; இது கலனையெனவும் படும். (36)

ஆன மந்திரக் கிழாார்பொருட் டன்றியும் வென்றி
மீன வன்பிறப் பறுக்கவும் வார்கழல் வீக்கி
வான நாயக னேந்திய மறையுறை கழித்த
ஞான வாள்புற விருளையு நக்கிவா ளெறிப்ப.