நரி பரியாக்கிய படலம்261



ஒரு வெண்குடையாகிப் பாவினால் என - தான் ஒரு வெள்ளி குடையாகிக்
கவிந்தாற் போல, முடியின் மேல் பால் நிலாக்கால - (வெண் கவிகை)
திருமுடியின் மேல் பால் போன்ற நிலவினை வீசவும்.

     நாறுதல் - தோன்றுதல். தற்குறிப்பு. (41)

முறையி னோதிய புராணமூ வாறுநா மொழியும்
இறைவ னாமிவன் படைத்தளித் தழிப்பவ னிவனே
மறையெ லாமுறை யிடுபரம் பொருளென வாய்விட்
டறையு மாறுபோ லியங்களீ ரொன்பது மார்ப்ப.

     (இ - ள்.) முறையின் ஒதிய புராணம் மூவாறும் - முறைப்பட ஓதிய
புராணங்கள் பதினெட்டும், இவன் நாம் மொழியும் இறைவனாம் -
இவன்றான் நாங்கள் கூறும் இறைவனாவான்; படைத்து அளித்து அழிப்பவன்
இவனே - ஆக்கி அளித்து அழிப்பவனாகிய இவனேதான், மறை எலாம்
முறையிடும் பரம்பொருள் என - வேதங்களெல்லாம் ஓலமிடும்
பரம்பொருளுமென்று, வாய்விட்டு அறையுமாறு போல் - வாய்திறந்து கூறுமா
போல, இயங்கள் ஈரொன்பதும் ஆர்ப்ப - இயங்கள் பதினெட்டும்
ஒலிக்கவும்.

     பதினெண் புராணங்கள் : பிரமம், பதுமம், வைணவம், சைவம்,
பாகவதம், பௌடியம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம்,
பிரமகைவர்த்தம், இலிங்கம், வராகம், காந்தம், வாமனம், மற்சம், கூர்மம்,
காருடம், பிரமாண்டம் என்பன. புராணங்கள் வேதப்பொருளைத்
துணிந்துரைக்கும் உபப்பிருங்கணமாதலின் ‘இவனே மறையெலா முறையிடு
பரம்பொருளென’ அறைதற்கு முரியனவென்க. தற்குறிப்பு. (42)

மிடைந்த மாயவாம் பரித்திரண் மேற்றிசை நோக்கி
நடந்த நாயக னான்மறைப் புரவியு நாப்பண்
அடைந்த தாலெழுந் தூளிக ளண்டமுந் திசையும்
படர்ந்த போம்வழி யாதென மயங்கினான் பரிதி.

     (இ - ள்.) மிடைந்த மாயவாம் பரித்திரள் - நெருஙகிய மாயமாகிய
தாவும் குதிரைக்கூட்டங்கள், மேல் திசை நோக்கி நடந்த - மேற்குத்
திசையை நோக்கி நடந்தன; நாயகன் நான்மறைப் புரவியும் நாப்பண்
அடைந்தது - இறைவனது நான் மறையாகிய குதிரையும் நடுவே வந்தது;
எழும் தூளிகள் அண்டமும் திசையும் படர்ந்த - மேலெழுந்த புழுதிகள்
அண்டங்களினும் திக்குகளினும் சென்று பரவின; பரிதிபோம் வழி யாது என
மயங்கினான் - (அதனால்) சூரியன் தான் செல்லும் வழி யாதென்று
மயக்கமுற்றனன்.

     வாவும்பரி, போகும்வழி என்பன விகாரமாயின. மேல் ஆறு
செய்யுளிலும் போந்த செயவெனெச்சங்கள் அடைந்தது என்னும் முற்று
வினை கொண்டன. நடந்த என்பதையும் எச்சப்படுத்துக. (43)