நரி பரியாக்கிய படலம்267



வேட்கை நோயால் உடல் மெலிதலின் வளை கழன்று விழுதலை ‘மாலை
விலை யென்னக் கொடுத்திடுவர்’ என்றார். மாலைகள் கொடுத்திடுதி
என்றதனால் அவனது மாலையைச் சூடிக்கொள்ளும் விருப்பமும், எடுத்திடுதி
எங்கள் வளை என்றதனால் அவன் தம்மைத் தொடவேண்டுமென்னும்
விருப்பமும் உடையரானமை பெற்றாம். இவை போல்வன மகளிர்கண்
நிகழும் அகமெய்ப்பாடுகள். (55)

எந்தன்முடி மாலைமலர் சிந்தினவெ டுத்துக்
கூந்தலின்மி லைந்துமதன் வாகைமலர் கொள்வார்
சாந்தனைய சிந்தின தனந்தடவி யண்ணற்
றோய்ந்தளவி லாமகிழ் துளும்பினவ ராவார்.

     (இ - ள்.) ஏந்தல் முடிமாலை சிந்தின மலர் எடுத்து - இறைவன்
திருமுடியின்கணுள்ள மாலையினின்றும் சிந்திய மலர்களை எடுத்து, கூந்தலில்
மிலைந்து - (சிலர்) தங்கள் குழலிற்சூடி, மதன் வாகைமலர் கொள்வார் -
மதவேளை வென்று வெற்றிமாலை கொள்வார்; அனைய சிந்தின சாந்து தனம்
தடவி - (சிலர்) அவ்வாறு திருமார்பினின்றுஞ் சிந்தின சாந்தினைத் தங்கள்
கொங்கைகளிற்பூசி, அண்ணல் தோய்ந்து அளவு இலா மகிழ் துளும்பினவர்
ஆவார் - அவ்வண்ணலைக்கூடி அளவிறந்த மகிழ்ச்சி மீதூர்ந்தவரை
ஒத்தார்.

     கூடினவர் போலும் மகிழ்ச்சியெய்துதலின் ‘மதன் வாகைமலர்
கொள்வார்’ என்றார். அனைய - அவ்வாறாக. (56)

பொட்டழகன் மார்பிலிடு போர்வைகவ சப்பேர்
இட்டதுமெய் நம்முயிர்த டுத்தமையி னென்பார்
கட்டழகன் மாலையது கண்ணியென வோதப்
பட்டதுமெய் நம்முயிர் படத்தமையி னென்பார்.

     (இ - ள்.) பொட்டு அழகன் மார்பில் இடுபோர்வை -
பொட்டினையணிந்த இவ்வழகன் மார்பிலணிந்த போர்வை, நம் உயிர்
தடுத்தமையின் - நமது உயிரை (அம்மார்பு கவராது) தடுத்ததினால்,
கவசப்பேர் இட்டது மெய் என்பார் - அதற்குக் கவசமென்னும் பெயர்
இட்டது மெய்யே என்று சிலர் கூறுவர்; கட்டழகன் மாலை - இப்பேரழகன்
மாலை, நம் உயிர் படுத்தமையின் - நமது உயிரை அகப்படுத்தினமையின்,
கண்ணி என ஓதப்பட்டது மெய் என்பார் - அது கண்ணி என்று
ஓதப்பட்டது உண்மையே என்று சிலர் கூறுவர்.

     கவசம் - சட்டை, மெய்யுறை. கண்ணி - மாலை, வலை. படைக்கலம்
புகாது காப்பதுபோன்ற நம்முயிர் புகாது காத்தலாலும், பறவை முதலியவற்றை
அகப்படுத்தல் போன்று நம்முயிரை அகப்படுத்தலாலும் கவசம், கண்ணி
என்னும் பெயர்கள் முறையே அவற்றுக்குப் பொருந்தினவென்றாரென்க. மெய்
- பொருந்தியது. மாலையது, அது பகுதிப்பொருள் விகுதி. (57)