மன்னவ னினைவாற்றான் மந்திரர் பெருமானைத்
துன்னினர் கொடுபோயத் தோள்வலி மறமள்ளர்
உன்னரி தெனவஞ்சா தொறுத்தன ருரவோர்தந்
தென்னவர் தமையுள்கிச் சேவடி துதிசெய்வார். |
(இ
- ள்.) மன்னவன் நினைவு ஆற்றால் - பாண்டியன்
கருத்தின்படியே, அத்தோள்வலி மறமள்ளர் - அந்தத் தோள் வலியையும்
கொலைத் தொழிலையுமுடைய ஒறுப்பாளர், மந்திரர் பெருமானை -
அமைச்சர் பெருமானாகிய அடிகளை, துன்னினர் கொடுபோய் - நெருங்கிக்
கொண்டு போய், அஞ்சாது - சிறிதும் பழிபாவங்கட்கு அஞ்சாமல், உன்
அரிது என ஒறுத்தனர் - கண்டோர் நினைப்பதற்கும் அரிய கடுந்தண்ட
மென்று கூறுமாறு ஒறுத்தனர்; உரவோர் - சிவஞானச் செம்மலாகிய அடிகள்,
தம் தென்னவர் தமை உள்கி - தமது சுந்தர பாண்டியராகிய சோமசுந்தரக்
கடவுளை நினைந்து, சேவடி துதிசெய்வார் - அவரது சிவந்த திருவடியைத்
துதிப்பாராயினர்.
அரசனது
நோக்கத்தால் அவன் உள்ளக் கருத்தினை உணர்ந்தன,
ரென்பார், மன்னவன் நினைவாற்றால் என்றனர்;
"நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற" |
என்னும் திருக்குறள்
நோக்குக. உன், முதனிலைத் தொழிற் பெயர்; உன்ன
என்பது தொக்கதுமாம். உரவோர் - பத்தி ஞான வலியுடையோர்.
தம்தென்னவர் - தமது பெருமானாகிய சுந்தரபாண்டியர். (67)
கலிநிலைத்துறை |
பூவார் முளரிப்
புத்தே ளறியா நெறிதந்தாய்
பாவார் தென்சொற் பனுவன் மாலைப் பணிகொண்டாய்
தேவா தேவர்க் கரசே சிறியே னுறுதுன்பம்
ஆவா வென்னா யஞ்சே* லென்னா யறனேயோ. |
(இ
- ள்.) முளரிப்பூ ஆர்புத்தேள் அறியா - தாமரை மலரில்
வசிக்கும் பிரமனும் அறியாத, நெறிதந்தாய் - சன்மார்க்கத்தை
அளித்தருளினை; பாஆர் தென் சொல் பனுவல் மாலைப் பணி கொண்டாய்
- பா அமைந்த தமிழ் மொழியாகிய மலராற்றொடுத்த பாட்டாகிய மாலையைச்
சாத்தும் பணியை அடியேன் பாற் கொண்டருளினை; தேவா - தேவனே,
தேவர்க்கு அரசே - திருமால் முதலிய தேவர்கட்கு அரசனே, சிறியேன்
உறுதுன்பம் - கடையேன் படுந் துன்பத்திற்கு, ஆவா என்னாய் - ஐயோ
வென்று இரங்குகின்றாயில்லை; அஞ்சேல் என்னாய் - அங்ஙனம் இரங்கி
அஞ்சற்க என்று கூறியருளுகின்றாயில்லை; அறனேயோ - இது உனக்கு
அறமாமோ ?
(பா
- ம்.) * ஆவா வென்னா வஞ்சே.
|