274திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கொண்டாய் - ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு எனது பணியையும்
கொண்டருளினை; ஆவியோடு இவ்வுடலும் நினதே அன்றோ - இவ்வுயிரும்
உடலும் நின்னுடையன அல்லவா, இன்று ஓலி வாளாது இருந்தால் - இன்று
என்னை நீங்கி வாளா இருந்தாயானால், என் உடையானே யார் - என்னை
உடையானே என்னைக் காப்பவர் வேறுயாவர் (ஒருவருமில்லை என்றபடி).

     வாயிற் கடையான பாவியேனைப் பொருளாக் கொண்டு என்றது

"நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய்"

எனவும், ஆவியோ டிவ்வுடலு நினதேயன்றோ என்றது

"அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமும்
     குன்றே யனையா யென்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ"

எனவும் அடிகள் திருவாசகத்துள் அருளிச்செய்தலாற் பெறப்படுவன. ஆவி
உடல் என்பவற்றைத் தனித்தனி கூட்டி நினதே என்க. ஓவி - ஒழிந்து.
என்னைக் காப்பார் யார் என விரித்துரைக்க. (70)

           [அறுசீரடியாசிரியவிருத்தம்]
என்றிரந் திரங்கு மன்ப ரிருசெவி யூடே யேங்குங்
கன்றிளஞ் செவியி னல்லான் கனைகுர லோசை போல
ஒன்றிய சின்னங் காளங் காகள மொலிக்கு மோசை
வென்றிகொள் புரவிச் செந்தூ டிசையெலாம் விழுங்கக் கண்டார்.

     (இ - ள்.) என்று இரந்து இரங்கும் அன்பர் - என்று குறையிரந்து
வருந்து வாதவூரடிகிள், இருசெவி ஊடே - தமது இரண்டு செவியுள்ளும்,
எங்கும் இளங்கன்றின் செவியில் - (தாயைப்பிரிந்து) வருந்தும் இளங்கன்றின்
காதில், நல்லான் கனைகுரல் ஓசை போல - நல்ல தாய்ப்பசு
கதறுங்குரலொலி சென்றடைதல் போல, ஒன்றிய சின்னம் காளம் காகளமும்
ஒலிக்கும் ஓசை - பொருந்திய சின்னமும் காளமும் காகளமும் ஒலிக்கும்
ஓசை சென்று விழுங்கவும், வென்றி கொள் புரவிச்செந்தூள் - பகைவரை
வென்று வெற்றி கொள்ளுங் குதிரைகள் வருதலால் மேலெழுந்த சிவந்த
புழுதி, திசை எலாம் விழுங்கக் கண்டார் - திக்குகள் அனைத்தையும்
விழுங்கவும் பார்த்தனர்.

     விழுங்க என்பதனை முன்னுங்கூட்டி, நல்லான் ஓசை போல
இருசெவியூடே சென்று விழுங்க என்க. சின்னம் முதலிய மூன்றும் ஊதும்
எக்காளவகை. கேட்டலையும் காண்டலாகக் கூறியது இலக்கணை வகை;
"நாற்றங் கேட்டலும்" என்புழிப்போல. (71)