நரி பரியாக்கிய படலம்275



வழுதியு மறிந்து வாத வூரரை விளித்து வந்த
தொழுகுல வமைச்சர் தம்பாற் றுகடவி ரன்பு கூர்ந்தெம்
பழுதறு கரும நும்போற் பரிக்குநர் யாரை யென்னா
எழுதரு மகிழ்ச்சி மேற்கொண் டளவளா யிருக்கு மெல்லை.

     (இ - ள்.) வழுதியும் அறிந்து - பாண்டியனும் அதனை அறிந்து,
வாத வூரரை விளித்து - வாதவூரடிகளை அழைப்பித்து, வந்த தொழுகுல
அமைச்சர் தம்பால் - வந்த மறையவர் குலத்தினராகிய மந்திரியார் பால்,
துகள் தவிர் அன்பு கூர்ந்து - குற்றமில்லாத அன்பு மீதூர்ந்து, எம் பழுது
அறுகருமம் - எமது குற்றமற்ற அரசியல் வினைகளை, நும்போல் பரிக்குநர்
யாரை என்னா - உம்மைப்போல ஏற்றுச்செய்து முடிப்பவர் யார் என்று கூறி,
எழுதரு மகிழ்ச்சி மேற்கொண்டு - மிக்க மகிழ்ச்சியைப் பொருந்தி,
அளவளாய் இருக்கும் எல்லை - அவருடன் அளவளாவியிருக்கும்போது.

     தொழுகுலம் - தெய்வமுமாம். யாரை, ஐ சாரியை. எழுதரு - மிகுகின்ற;
தரு துணைவினை. (72)

பாயிருட் படலங் கீறிப் பல்கதிர் பரப்பித் தோன்றுஞ்
சேயிளம் பரிதி வானோ ரனையராய்ச் சிறந்த காட்சி
மேயின பாக ரோடும் விலாழியாற் பரவை செய்யும்
வாயின வாகி வந்த மாயவாம் பரிக ளெல்லாம்.

     (இ - ள்.) மாயவாம்பரிகள் எல்லாம் - மாயமாகிய தாவுங் குதிரைகள்
அனைத்தும், பாய் இருள் படலம் கீறி - பரந்த இருட்படலத்தைக் கிழித்து,
பல் கதிர்பரப்பித் தோன்றும் - பல கிரணங்களைப் பரப்பித் தோன்றுகின்ற,
சேய் இளம் பரிதிவானோர் அனையராய் - சிவந்த இளஞ்சூரியர்களை
ஒத்தவராய், சிறந்த காட்சி மேயின பாகரோடும் - சிறந்த தோற்றத்தைப்
பொருந்தின பாகர்களோடும், விலாழியால் பரவை செய்யும் வாயினவாகி
வந்த - விலாழியாற் கடலினைச் செய்யும் வாயினையுடையனவாகி வந்தன.

     ஆதித்தர் பன்னிருவராகலின் ‘பரிதிவானோர்’ என்றார். விலாழியாற்
பரவை செய்யும் என்றமையால் பரிகளெல்லாம் கடலினலைபோன்றன
எனவும், பாகரெல்லாரும் கடலிலுதித்த ஆதித்தர்கள் போன்றனர் எனவும்
கொள்க. வந்த, அன் பெறாதமுற்று. (73)

வண்டுழு தாரி னான்றன் மரபின்மன் னவரு முன்னாட்
கண்டறி யாத காட்சிக் கவனவாம் பரியை நோக்கி
அண்டர்நா யகன்போ னாமு மாயிரங் கண்பெற் றாலும்
உண்டமை யாவென் றுள்ளக் குறிப்பொடு முவகை பூத்தான்.