நரி பரியாக்கிய படலம்277



புண்டரிகத் தாளசையப் பாச நீக்கும்
     புனைகரத்தாற் பரிபூண்ட பாசம் பற்றிக்
கொண்டரச னெதிர்போந்து மன்னா வெங்கள்
     குதிரையேற் றஞ்சிறிது காண்டி யென்றார்.

     (இ - ள்.) அண்டம் எலாம் ஆதாரமாகத் தாங்கும் -
அண்டங்களனைத்தையும் ஆதாரமாக நின்று தாங்கியருளும், ஆனந்தத்
தனிச்சோதி - இன்பவடிவாகிய ஒப்பற்ற ஒளிமயமாகிய இறைவர், அண்டம்
தாங்கும் சண்ட மறைப்பரி - அண்டத்தால் தாங்கப்படும் வேகமுடைய
வேதப்புரவி, தனக்கு ஆதாரமாகித் தரிக்க தமக்கு ஆதாரமாகித் தம்மைத்
தாங்கா நிற்க, ஒரு காலத்தும் அசைவு இலாத புண்டரிகத்தாள் அசைய -
ஒரு காலத்தினும் அசையாத தாமரை மலர் போலுந்திருவடிகள் அசைய,
பாசம் நீக்கும் புனைகரத்தால் - உயிரிகளின் பாசத்தைப் போக்கும் அழகிய
திருக்கையினால், பரிபூண்டபாசம் பற்றிக்கொண்டு - குதிரைவாயிற் பூண்ட
பாசத்தைப் பிடித்துக்கொண்டு, அரசன் எதிர் போந்து - அரசனெதிரே
போய், மன்னா - மன்னனே, எங்கள் குதிரை ஏற்றம் சிறிது காண்டி என்றார்
- எங்கள் குதிரை ஏற்றத்தினைச் சிறிது காண்பாயாக என்று கூறியருளினர்.

     அண்டங்களுக்கெல்லாம் சார்பாகித் தனக்கொரு சார்பின்றி
நிராதாரனாயுள்ள இறைவன் அண்டத்தினாலும் தரிக்கப்படும் ஆதேயமாகிய
வேதப்பரி தனக்கு ஆதாரமாகி நின்று தாங்குமாறு வந்தான் என அவனது
அருள் விளையாடலை வியந்து கூறியவாறு. சண்டம் - வலிமை வேகம்
இறைவன் "போக்கும் வரவும் புணர்வும் இலான்" ஆகையால் ஒருகாலத்தும்
அசைவிலாத புண்டரிகத்தாள்’ என்றார். பாசம் நீக்கும் கரத்தாற் பாசம்பற்றி
என நயம்படக் கூறினார். (76)

           [அறுசீரடியாசிரிய விருத்தம்.]
இசைத்தவைங் கதியுஞ் சாரி யொன்பதிற் றிரட்டி யான*
விசித்திர விகற்புந் தோன்ற வேந்தனு மவையு மன்றித்
திசைப்புலத் தவரு மேலைத் தேவரு மருள மேற்கொண்
டசைத்தன ரசைவற் றெல்லா வுலகமு மசைக்க வல்லார்.

     (இ - ள்.) இசைத்த ஐங்கதியும் - (பரிநூலிற்) கூறிய மல்லகதி முதலிய
ஐந்து கதிகளும், ஒன்பதிற்று இரட்டியான விசித்திர சாரி விகற்பும் -
பதினெட்டாகிய விசித்திர நடை விகற்பங்களும், தோன்ற - வெளிப்பட,
வேந்தனும் அவையும் அன்றி - மன்னனும் அவன் அவையிலுள்ளாரு
மல்லாமல், திசைப்புலத்தவரும் மேலைத்தேவரும் மருள - திக்குப்பாலகரும்
விண்ணுலகிலுள்ள தேவர்களுங் கண்டு மருளுமாறு, அசைவு அற்று எல்லா
உலகமும் அசைக்கவல்லார் - தான் அசைதலின்றி உலகமனைத்தையும்
அசைக்க வல்லராகிய அவ்விறைவர், மேற்கொண்டு அசைத்தனர் -
அக்குதிரைமேல் இவர்ந்தருளி அதனை நடத்திக் காட்டினர்.


     (பா - ம்.) * இரட்டியாதி.