வானவர் தமக்கே யன்றி மனிதருக் கிசையத் தக்க
வானவன் றறிஞ ரிட்ட விலைவரம் பகன்ற நூலின்
மானமுள் ளனவாய் நல்ல வாசிக ளுனக்கு வந்த
ஊனமில் பரிமா விற்கும் வாணிக முரைப்பக் கேட்டி. |
(இ
- ள்.) வானவர் தமக்கே அன்றி - தேவர்களுக்கு
இசைவதேயல்லாமல், மனிதருக்கு இசையத்தக்கவான அன்று - மக்களுக்கு
இசையத்தக்கனவல்ல; அறிஞர் இட்டவிலை வரம்பு அகன்ற - பரிநூற்புலவர்
மதிக்கும் விலையின் எல்லையைக் கடந்தன; நூலின் மானம் உள்ளனவாய் -
பரிநூலிற் கூறும் பெருமை உள்ளனவாய், நல்ல வாசிகள் உனக்கு வந்த -
நன்மையமைந்த குதிரைகள் உனக்கு வந்தன; ஊனம் இல் பரிமாவிற்கும்
வாணிகம்உரைப்பக் கேட்டி - குற்றமில்லாத குதிரைகளை விற்கும்
வாணிகமுறையினைச் சொலலக் கேட்பாயாக.
மனிதருக்கிசையத்தக்கனவல்ல,
அறிஞரிட்ட விலைவரம்பகன்றன
என்பன அவற்றைப் புகழ்ந்துரைப்பன வன்றி, உண்மையைக் குறிப்பிடுவன
வாதலும் காண்க. இசையத்தக்கனவல்ல, விலைவரம்பகன்றன
அத்தன்மையவான நல்ல வாசிகள் என்க. அகன்ற, வந்த என்பன
அன்பெறாத பலவின் பால் முற்றுக்கள். (82)
இன்னவாம் பரிக ளென்பா லின்றுநீ சயிறு மாறி
நின்னவாக் கொள்ளு நீரா னின்னவாம் பரியே நாளை
என்னவா யிருந்த வேனு மெனக்குமுன் றனக்குங் கொண்டு
மன்னவா கரும மில்லை பரிவிலை வழக்கீ தென்றார். |
(இ
- ள்.) மன்னவா - மன்னனே, இன்னவாம் பரிகள் - இந்தத்
தாவுங் குதிரைகளை, இன்று நீ என்பால் - இப்பொழுது நீ என்னிடத்தில்,
கயிறுமாறி நின்னவாக் கொள்ளும் நீரால் - கயிறுமாறி நின்னுடையனவாக
ஏற்றுக் கொள்ளு முறையினால், பரிநின்னவே ஆம் - இக்குதிரைகள்
நின்னுடையனவே யாகும்; நாளை என்னவாய் இருந்தவேனும் - (அங்ஙனம்
ஆதலினால்) நாளை இவை என்ன தன்மையை அடைந்தனவாயினும்,
எனக்கும் உன்தனக்கும் - எனக்கும் உனக்கும், கொண்டு - இது பற்றி,
கருமம் இல்லை - யாதொரு வழக்குமில்லை; பரிவிலை வழக்கு ஈது என்றார்
- குதிரை வியாபார முறைமை இதுவாகும் என்று கூறியருளினார்.
இன்ன
ஆம் பரிகள் எனப்பிரித்து இத்தன்மையனவாகிய புரவிகள்
என்றும் பொருள்கொள்க. கயிறுமாறுதல் - மாடு, குதிரை முதலியன
வாங்குவோர் அவை தமக்குரிமையானமைக்கு அடையாளமாக வேறு கயிறு
பூட்டிக் கொள்ளுதல். இது கொண்டு என வருவித்துரைக்க. (83)
|