நரி பரியாக்கிய படலம்283



யுடையனவாய், உரமும் கண்டமும் பைத்திடும் அராப்படம் போன்ற -
மார்பும் மிடறும் பரந்த பாம்பின் படம் போன்றனவாய குதிரைகள், பாடலம்
- பாடலமெனப் பெயர் பெறும்.

     நாவினவும் உயர்ந்தனவும் எயிற்றினவும் போன்றனவும் ஆகிய
குதிரைகள் என விரித்துரைத்தலுமாம். குளம்புகள் உயர்ந்த, உரமும்
கண்டமும் அராப்படம் போன்ற எனச்சினை வினைகள் முதலோடு
பொருந்தின. இது பாடலம் என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (88)

அகலிய நுதலின வாய்ந்த குஞ்சிபோல்
நிகரறு கொய்யுளை நிறமொன் றாயின
புகரறு கோணமூன் றாகிப் பொற்புறு
முகமுடை யனவய மொய்கொள் கோடகம்.

     (இ - ள்.) அகலியநுதலின - அகன்ற நெற்றியை யுடையனவாய்,
ஆய்ந்த குஞ்சிபோல் நிகர் அறுகொய்யுளை - சிக்கறுத்த மயிர் போல
(வாய்ந்து) ஒப்பற்ற புறமயிர், நிறம் ஒன்று ஆயின - ஒரே நிறம்
வாய்ந்தனவாய், புகர் அறு கோணம் மூன்று ஆகி - குற்றமற்ற மூன்று
கோணமுடைய தாய், பொற்பு உறு முகம் உடையன - அழகு பொருந்திய
முகத்தை யுடையன வாய குதிரைகள், வயம் மொய் கொள்கோடகம் -
வெற்றியும் வலியுமுடைய கோடகம் எனப்பெயர் பெறும்.

     கொய்உளை - கத்தரித்த பிடரிமயிர். முக்கோணமாகிப் பொற்புறும்
முகம் என்க. மொய் - வலிமை. இது கோடகம் என்னும் குதிரையின்
இலக்கணம் கூறிற்று. (89)

முட்டிய சமரிடை முகத்தில் வாளினால்
வெட்டினு மெதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கைதோல்
பட்டிமை நரியரி சரபம் பாய்முயல்
எட்டிய கதியின விவுளி யென்பவே.

     (இ - ள்.) முட்டிய சமரிடை - நெருங்கிய போரின்கண், முகத்தில்
வாளினால் வெட்டினும் - தம் முகத்தில் வாளினால் வெட்டினாலும்,
எதிர்ப்பதாய் - எதிர்த்துப் போர் புரிவதாய், குரங்கு வேங்கை தோல் -
குரங்கும் புலியும் யானையும், பட்டிமை நரி அரிசரபம் பாய்முயல் -
வஞ்சகமுள்ள நரியும் சிங்கமும் சரபப்புள்ளும் பாய்கின்ற முயலுமாகிய
இவற்றின், எட்டிய கதியின - மிக்க கதியினையுடைய குதிரைகளை, இவுளி
என்ப - இவுளி என்று கூறுவர்.

     தோல் - யானை. பட்டிமை - படிறு. சரபம் - சிம்புள். எதிர்ப்பதாய்
கதியின என ஒருமையும் பன்மையும் விரவிவந்தன. இஃது இவுளி என்னும்
குதிரையின் இலக்கணம் கூறிற்று. (90)