நரி பரியாக்கிய படலம்285



கொடிய சிங்கமுமாகிய இவற்றைப்போல் ஒலிக்குங் குதிரை. பரி ஆம் - பரி
என்னும் பெயருடையதாகும்.

     பங்கம் - சேறு. மான்மதம் - கத்தூரி. இதுபரி என்னும் குதிரையின்
இலக்கணம் கூறிற்று. (93)

நாலுகால் களுங்கடைந் தெடுத்து நாட்டினாற்
போல்வதாய்க் கொட்புறும் போது சுற்றுதீக்
கோலையொப் பாகிமேற் கொண்ட சேவகன்
காலினு ளடங்குவ தாகுங் கந்துகம்.

     (இ - ள்.) நாலுகால்களும் கடைந்த எடுத்து நாட்டினால் போல்வதாய்
நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டிவைத்தாற் போல்வதாய்,
கொட்புறும் போது - சுழலும் போதில், சற்று தீக்கோலை ஒப்பாகி -
கொள்ளிவட்டம் ஒப்பதாகி, மேற்கொண்ட சேவகன் காலினுள் அடங்குவது -
ஏறிய வீரனுடைய காலினுள் அடங்கும் குதிரை, கந்துகம் ஆகும் - கந்துகம்
என்னும் பெயருடையதாகும்.

     கொட்புறல் - வட்டமாகச் சாரிவருதல், விரைவு மிகுதியால் குதிரையின்
வடிவு புலப்படாது வட்டவடிவே தோன்றுதலின் சுற்று தீக்கோலை
உவமங்கூறினார். ஒப்பாகி - ஒப்பதாகி, இது கந்துகம் என்னும் குதிரையின்
இலக்கணம் கூறிற்று. (94)

அரணமுந் துருக்கமு மாறுந் தாண்டிடும்
முரணின வாகியிம்* முற்றி லக்கணப்
புரணமெல் லாநிறை புரவி போந்தன
இரணவே லாய்வய தெட்டுச் சென்றவால்.

     (இ - ள்.) அரணமும் துருக்கமும் ஆறும் தாண்டிடும் முரணினவாகி
- மதிலும் மலைமேற் கோட்டையும் நதியுமாகிய இவற்றைத் தாண்டிடும்
வலியினையுடையனவாய், இம்முற்று இலக்கணப் புரணம் எல்லாம் நிறைபுரவி
போந்தன - இம்முழு இலக்கணமும் ஒளியும் நிறைந்த குதிரைகள் வந்தன;
இரணவேலாய் - பகைவரைப் புண்படுத்தும் வேற்படையேந்திய பாண்டியனே,
வயது எட்டுச் சென்ற - இவைகள் எட்டு வயதாயின வாகும்.

     துருக்கம் - கோட்டை; காடுமாம். இலக்கணமும் புரணமும் என்க.
புரணம் - ஒளி; கதியுமாம். ஆல், அசை. (95)

பகைத்திற முருக்குமிப் பரிகண் மன்னநீ
உகைத்திடத் தக்கவென் றோதி வேதநூற்
சிகைத்தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர்
முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும்

     (பா - ம்.) * முரணது வாகி.