சுந்தரப் பேரம்பெய்த படலம் 29



மறுபுல மன்னர் அனைவரும், நச்சு மரத்தினை அடுத்த சந்தும் - நஞ்சு
மரத்தை அடுத்த சந்தனமரங்களும், கதழ் எரி மடுத்தது என்ன - விரைந்து
பற்றும் நெருப்பினால் எரியுண்டாற்போல, அவிந்தார் - இறந்து பட்டனர்.

     புரம் - காசிமுதலிய பதிகள், வேலின் திண்மையும் கூர்மையும் தோன்ற
‘அரத்தினை யறுக்கும் வைவேல்’ என்றார். நச்சுமரத்தை யழித்தற்பொருட்டு
மூட்டும் எரியால் அதனைச் சார்ந்த சந்தனமரமும் அழிதல்போலச் சோழனை
அழித்தற் பொருட்டுப் புரிந்த போரில் அவற்குத் துணையாய் வந்த
மன்னர்களும் அழிந்தனர் என்றார்;

"மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த
இனத்தா லிகழப் படுப -- புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்"

என்னும் நாலடிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (39)

மாசறு காட்சி யான்றன் வாளியா லவிந்தோர் தம்மை
மூசுவண் டென்னச் சூழ்ந்து மொய்த்தன பைத்த கூளி
காய்சினச் சேனங் காகங் கழுகினம் பற்றி யீர்த்துப்
பூசலிட் டொன்றோ டொன்று போர்செய்வான் றொடங்கிற்
                                      றம்மா.

     (இ - ள்.) மாசு அறு காட்சியான் தன் வாளியால் - குற்றமற்ற
இயற்கை அறிவினையுடைய இறைவன் வாளிகளால், அவிந்தோர் தம்மை -
இறந்தவர்களை, பைத்த கூளி - பரந்த பேய்கள், மூசுவண்டு என்னச் சூழ்ந்து
மொய்த்தன - மலரில் மொய்க்கும் வண்டுகள்போலச் சூழ்ந்து மொய்த்தன;
காய்சினச்சேனம் காகம் கழுகு இனம்பற்றி ஈர்த்து - மிக்கசினத்தையுடைய
பருந்துகளும் காகங்களும் கழுகுக் கூட்டங்களும் பிடித்து இழுத்து, பூசல்
இட்டு ஒன்றோடு ஒன்று போர்செய்வான் தொடங்கிற்று - கலகம் விளைத்து
ஒன்றோடொன்று போர் புரிதற்குத் தொடங்கியது.

     செய்வான் : வானீற்று வினையெச்சம். தொடங்கிற்று : பன்மையிலொருமை, அம்மா : இடைச்சொல். (40)

வெஞ்சின மறக்கோ னம்பி விடுகணை வெள்ளத் தாழ்ந்து
வஞ்சின முறுதன் சேனை மடிந்தது கண்டு மாழாந்
தெஞ்சின படையுஞ் சூழ வேதிலார் நகையுஞ் சூழத்
துஞ்சின மறமுஞ் சூழச் சோழனு முடைந்து போனான்.

     (இ - ள்.) வெஞ்சின மறக்கோன் நம்பி - கொடிய சினத்தையுடைய
வேடர் தலைவனாகிய நம்பி, விடுகணை வெள்ளத்து ஆழ்ந்து -விடுத்த
அம்பு வெள்ளத்து மூழ்கி, வஞ்சினம் உறுதன் சேனை மடிந்தது கண்டு -
வஞ்சினங்கூறிப் போருக்கு உற்ற தனது சேனை இறந்தொழிந்தமை கண்டு,
மாழாந்து - மயங்கி, எஞ்சினபடையும் சூழ - எஞ்சிய சேனையுந்