296திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) இவ்விரண்டு வகைப்பரியும் வந்தன - இந்த இரண்டுவகைக்
குதிரைகளும் வந்தன; புரவி அடி வைத்தால் ஒத்த பந்து எனவும் - குதிரை
அடி வைத்தால் ஒத்த பந்தைப்போலவும், நின்றால் மலை எனவும் -
நின்றதானால் மலை போலவும், ஒலித்தால் - கனைத்ததானால், பகடு சீறும்
வெம் தறுகண் அரி எனவும் - யானையைச் சீறிக் கொல்லும் கொடிய
அஞ்சாமையையுடைய சிங்கம்போலவும், வேகத்தால் காற்று எனவும் -
வேகத்தினால் காற்றைப்போலவும், மிதிக்கும் கூத்தால் சந்தம் நட மகன்
எனவும் - மிதித்து நடிக்கும் கூத்தினால் அழகிய கூத்தனைப் போலவும்,
நடக்கில் அரி களிறு எனவும் தகையதாகி - நடந்தால் சிங்கத்தையும்
யானையையும் போலவும் தன்மையையுடையதாய்.

     இரண்டு வகைப்பரி - பகல்வெற்றி தருவதும், இராவெற்றி தருவதும்.
ஒத்த - ஒன்றையொன் றொத்த. அடிவைத்தால் குளம்பு பந்தெனவும்,
நின்றால் உடல் மலையெனவும், ஒலித்தால் ஒலி அரியெனவும் என இங்ஙனம்
விரித்துரைத்துக்கொள்க. குளகம். (118)

குலமகள்போற் கவிழ்முகமுங் கருநெய்த லெனக்கண்ணுங் கொண்டு
                                             கார்போல்
நிலவியசீர் வண்ணமுங்கார் நெய்தலெனக் கடிமணமு நிறைந்து நாற்ற
மலரகில்சந் தெரிமணிப்பூ ணலங்கரிக்கி லானாத மகிழ்ச்சி யெய்தி
இலகுவதுத் தமவாசி யென்றுரைப்பர் பரிவேத மெல்லை கண்டோர்.

     (இ - ள்.) குலமகள்போல் கவிழ்முகமும் - உயர்குடியிற் பிறந்த
கற்புடை மகள்போலக் கவிழ்ந்த முகத்தையும், கருநெய்தல் எனக் கண்ணும்
கொண்டு - கருங்குவளை மலர்போலும் கண்ணையும் கொண்டு, கார்போல்
நிலவிய சீர் வண்ணமும் - கருமுகில் போல் விளங்கிய சிறந்த நிறமும், கார்
நெய்தல் எனக் கடிமணமும் நிறைந்து - கருநெய்தல் போல மிக்க மணமும்
நிறைந்து, நாற்றமலர் அகில் சந்து எரிமணிப்பூண் அலங்கரிக்கில் -
மணமிக்க மலரும் அகிற்குழம்பும் சந்தனக் குழம்பும் நெருப்புப்போன்ற
மணிகள் அழுத்திய அணிகளுமாகிய இவற்றால் ஒப்பனைச் செய்யின்,
ஆனாத மகிழ்ச்சி எய்தி இலகுவது - நீங்காத மகிழ்ச்சியை அடைந்து
விளங்குவது, உத்தம வாசி என்று - உத்தமக்குதிரை என்று, பரிவேதம்
எல்லை கண்டோர் உரைப்பர் - புரவிநூலின் வரம்பினைக் கண்டறிந்தவர்
கூறுவர்.

     தகையதாகி, கொண்டு, நிறைந்து, எய்தி, இலகுவது உத்தமவாசி என்று
ரைப்பர் என வினை முடிவு செய்க. (119)

நூறுவிர லுத்தமவாம் பரிக்குயர்வீ ரெட்டுவிர னூறு நீக்கிக்
கூறுவிரன் மத்திமவாம் பரிக்கறுபத் தொன்றதமக் குதிரைக் கென்ப
ஈறில்புக ழாய்பொருந ரிப்பரியைப் பூசனஞ்செய் திறைஞ்சிப் பாசம்
மாறுவரா லெனமணித்தார் சதங்கைசிலம் பணிவித்து மதிக்கோ மாறன்.