304திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



நல்ல வாம்பரி செலுத்தின னமக்கினிக் கவலை
இல்ல வாம்படி யாக்கின னின்னமொன் றுலகை
வெல்ல வாம்படி தன்னருள் விளைக்குமா னந்தம்
புல்ல வாம்படி யெமைத்தவம் பூட்டுவான் வேண்டும்.

     (இ - ள்.) நல்ல வாம்பரி செலுத்தினன் - நல்லதாவுகின்ற
குதிரைகளைச் செலுத்தி வந்தனன்; நமக்கு இனிக் கவலை இல்ல வாம்படி
ஆக்கினன் - (அதனால்) நமக்கு இனித் துன்பமில்லை யாமாறு
செய்தருளினன்; இன்னம் ஒன்று - (ஆனால்) இன்னும் செய்யவேண்டுவது
ஒன்றுளது; உலகை வெல்ல ஆம்படி - (அதாவது) உலகினை வெல்லத் தக்க
வண்ணம், தன் அருள் விளைக்கும் - தனது திருவருள் உண்டாக்கும்,
ஆனந்தம் புல்ல ஆம்படி - இன்பம் பொருந்தத் தக்க வண்ணம், எமைத்
தவம் பூட்டுவான் வேண்டும் - எம்மைத் தவநெறியிற் செலுத்துதல் வேண்டும்.

     இல்லவாம்படி - இலவாமாறு. வெல்லவும் புல்லவும் ஆகும் வண்ணம்
என்க. வெல்லாம்படி, புல்லாம்படி எனப் பாடங்கொள்வது சிறப்பு. பூட்டுவான் தொழிற் பெயர். (5)

என்ற வாதரந் தலைக்கொள விகபரத் தாசை
ஒன்று மின்றியே யுணர்வினுக் குள்ளுணர் வாகத்
துன்று பூரண மாகிய சுந்தரச் சோதி
மன்று ளாடிய சேவடி மனம்புதைத் திருந்தார்.

     (இ - ள்.) என்ற ஆதரம் தலைக்கொள - என்ற விருப்பமீக்கூர,
இகபரத்து ஆசை ஒன்றும் இன்றியே - இம்மை மறுமை யின்பங்களில் ஆசை
சிறிதும் இல்லாமல், உணர்வினுக்குள் உணர்வாகத்துன்று - அறிவுக்குள்
அறிவாகப் பொருந்திய, பூரணமாகிய சுந்தரச் சோதி - எங்கும் நிறைந்த
பரம்பொருளாகிய சோமசுந்தரக் கடவுளின், மன்றுள் ஆடிய சே அடி -
வெள்ளியம்பலத்தில் ஆடியருளும் சிவந்த திருவடியை, மனம் புதைத்து
இருந்தார் - தமது உள்ளத்துட்கொண்டிருந்தனர்.

     முன்னரும் ‘இம்மையாசையும் மறுமையிலாசையும் இகந்து’ எனப்
போந்தமை காண்க. ஒன்றும் - சிறிதும். உள்ளுணர்வாக எனப்
பிரித்துரைத்தலுமாம். (6)

நாளை யுந்திரு வாலவாய் நாயகன் றமரை
ஆள மண்சுமந் தருளுமென் றதனையுங் காண்பான்
ஊளைவெம்பரிப்* பூழிபோர்ப் புண்டமெய் கழுவி
மீள வேண்டுவான் போற்கடல் குளித்தனன் வெய்யோன்.

     (பா - ம்.) * வெம்பரித் தூளி.