306திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



என்றார். இவ்விரண்டு செய்யுளும் உருவகத்தை அங்கமாகக் கொண்டுவந்த
தற்குறிப்பேற்றம். (9)

கள்ளொ ழுக்குதார் மீனவன் கடிமனை புகுந்த
புள்ளு வப்பரி நள்ளிருட் போதுவந் தெய்தப்
பிள்ளை யாகிய மதிமுடிப் பிரான்விளை யாட்டால்
உள்ள வாறுதம் வடிவெடுத் தொன்றொடொன் றுசாவும்.

     (இ - ள்.) கள் ஒழுக்குதார் மீனவன் கடிமனை புகந்த - தேனைச்
சொரிகின்ற வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியனது காவலையுடைய
மனையின் கண் புகுந்த, புள்ளுவப்பரி - வஞ்சக வுருக்கொண்ட குதிரைகள்,
நள் இருள் போது வந்து எய்த - நடுவிராப் பொழுது வந்து பொருந்த,
பிள்ளையாகிய மதிமுடிப்பிரான் விளையாட்டால் - பிறை மதியினைச் சூடிய
முடியினையுடைய இறைவன் திருவிளையாடலினால், உள்ளவாறு தம்வடிவு
எடுத்து - தமது வடிவத்தை முன் உள்ளபடியே எடுத்து, ஒன்றோடு ஒன்று
உசாவும் - ஒன்றோடொன்று உசாவா நிற்கும்.

     பிள்ளையாகிய மதி - பிறைமதி. (10)

சங்கி னோசையும் பிணப்பறை யோசையுஞ் சரிந்த
மங்கு லோதிய ரழுகுர லோசையும் வடந்தாழ்
கொங்கை சேப்புறக் கையெறி யோசையுங் குளிர*
எங்கு நாஞ்செவி பருகுவ மின்னமு தென்ன.

     (இ - ள்.) சங்கின் ஓசையும் பிணப்பறை ஓசையும் - சங்கின்
ஒலியினையும் சாக்காட்டுப் பறையின் ஒலியினையும், சரிந்தமங்குல் ஓதியர்
அழுகுரல் ஓசையும் - பின்புறஞ் சரிந்த முகில் போலுங் கூந்தலையுடைய
மகளிர் அழுகுரலின் ஒலியினையும், வடம்தாழ் கொங்கை சேப்புறக் கை எறி
ஓசையும் - (அவர்கள்) முத்துமாலை தங்கிய கொங்கைகள் சிவக்குமாறு
கையினால் அடித்துக் கொள்ளும் ஒலியினையும், இன் அமுது என்ன -
இனிய அமுதினை வாய்குளிரப் பருகுவதுபோல, நாம் எங்கும் செவி குளிரப்
பருகுவம் - நாம் எவ்விடத்தும் செவிகள் குளிருமாறு நுகர்வோம்.

     சங்கோசையும் சாக்காடு குறித்தது. சரிந்த - துயரத்தால் முடியாது
கிடக்கின்ற என்றுமாம். சேப்பு - சிவத்தல். எங்கும் - புறங்காட்டிலும்
அதனைச் சூழ்ந்த இடங்களிலும். பருகும் இயற்கை யுடையேம் என்க. குளிற
என்னும் பாடத்திற்கு ஒலிக்க என்று பொருள் கொள்க. (11)

வாம்ப ரித்திர ளாகிநா மனித்தரைச் சுமந்து
தாம்பு சங்கிலித் தொடக்குண்டு மத்திகை தாக்க
ஏம்ப லுற்றனம் பகலெலா மிப்பொழு தீண்டு
நாம்ப டைத்தன நம்முரு நம்விதி வலத்தால்.

     (பா - ம்.) * குளிற.