ஆகிய இடங்களிற்
சென்றனவாய், பல்மாடம் நீள் நகர் எலாம் செறிந்த -
பல மாடங்களையுடைய நெடிய நகர் முழுதும் நெருங்கின.
தள்ளி
- கடந்து; நீங்கி. அறம்பயின்ற மனை - அறச்சாலை; தரும
சத்திரம். கவலை - இரண்டு மூன்று தெருக்கள் கூடுமிடங்கள்; கவர்
வழியுமாம். படர்ந்த முற்றெச்சம். (22)
மன்றுஞ் சித்திர கூடமு மாடமு மணிசெய்
குன்றுந் தெற்றியு முற்றமு நாளொடு கோள்வந்
தென்றுஞ் சுற்றிய பொங்கரு மெங்கணு நிரம்பி
ஒன்றுஞ் சுற்றமோ டூளையிட் டுழல்வன நரிகள். |
(இ
- ள்.) நரிகள் - நரிக்கூட்டங்கள், மன்றும் சித்தர கூடமும்
மாடமும் - மன்றங்களும் சித்திர மெழுதிய கூடங்களும் மாடங்களும், மணி
செய்குன்றும் தெற்றியும் முற்றமும் - மணிகளாற் கட்டிய செய்குன்றுகளும்
திண்ணைகளும் முன்றில்களும், நாளொடு கோள் வந்து என்றும் சுற்றிய
பொங்கரும் எங்கணும் நிரம்பிய - நாண்மீனொடு கோள்களும் எஞ்ஞான்றுஞ்
சுற்றப் பெறும் சோலைகளுமாகிய எல்லா விடங்களிலும் நிறைந்து, ஒன்றும்
சுற்றமோடு ஊளையிட்டு உழல்வன - நெருங்கிய சுற்றத்தோடு ஊளையிட்டுத்
திரியா நின்றன.
மன்று
- ஊர்க்கு நடுவே எல்லாருங் கூடி யிருக்கும் மரத்தடி என்றும்,
தெற்றி - அம்பலம் என்றும் கொள்ளலுமாம். (23)
கரியி னோசையும் பல்லிய வோசையுங் கடுந்தேர்ப்
பரியி னோசையு மின்றமி ழோசையும் பாணர்
வரியி னோசையு நிரம்பிய மணிநக ரெங்கும்
நரியி னோசையாய்க் கிடந்தது விழித்தது நகரம்.
|
(இ
- ள்.) கரியின் ஓசையும் பல்இய ஓசையும் - யானைகளின்
பிளிறொலியும் பலவகை வாத்தியங்களின் ஒலியும், கடுந்தேர்ப்பரியின்
ஓசையும் - விரைந்து செலவினையுடைய தேரிற்பூட்டிய குதிரைகளின்
கனைப்பொலியும், இன் தமிழ் ஓசையும் - இனிய தமிழின் ஒலியும்,
பாணர்வரியின் ஓசையும் - பாணர்களின் இசைப்பாட் டொலியும், நிரம்பிய
மணிநகர் எங்கும் - நிறைந்த அழகிய நகர்முழுதும், நரியின் ஓசையாய்க்
கிடந்தது - நரிகளின் ஊளை யொலிமயமாய்க் கிடந்தது; நகரம் விழித்தது -
நகரிலுள்ளோர் விழித்தனர்.
தமிழோசை
- புலவர்கள் தமிழாராய்ச்சிசெய்யும் ஓசை. வரி - இசைப்
பாட்டு. நகரம் என்னும் இடப்பெயர் இடத்தினுள்ளாரை உணர்த்தி
நின்றது. (24)
|