316திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கைகள் ஆயிரமும் கொண்டு - ஆயிரங்கரங்களையுங் கொண்டு, அருக்க
வெங்கடவுளும் - வெவ்விய சூரி தேவனும், குணகடல் உதித்தான் -
கீழைக்கடலில் வந்து தோன்றினான்.

     அண்டருக்கும் என்னும் சிறப்பும்மை தொக்கதுமாம். மறைப்பொருள்
என்னும் பெயருக்கேற்ப அரிதாகிய எளிதாகி என அஃறிணை வாய்பாடு
கூறினார். வாதவூரர் தலையன்பால் இடையறாது அழுது
கொண்டிருந்தாரென்பது திருவாசகத்தால் நன்கு விளங்குதலின்
‘அழுகைத்தொண்டர்’ என்றார். இப்புராணத்து வாழ்த்தினுள்ளும் ‘துளும்பு
கண்ணீருள் மூழ்கி அழுதடி யடைந்த அன்பன்’ என்று கூறினமை காண்க.
இறைவனுடைய அங்கமெல்லாம் அருளேயாகலின் ‘அருட் கழல்’ என்றார்.
வருடுவான், வினையெச்சம். கைகள் என்றது கிரணங்களை; அதற்குக் கரம்
என்னும் பெயருண்மையும் காண்க. கொண்டு தோன்றினாற் போல என
விரித்துரைத்துக் கொள்க. இது தற்குறிப்பேற்ற அணி. (34)

கவன வெம்பரி செலுத்திமேற் கவலைதீர்ந் துள்ளே
சிவமு ணர்ந்தவர் சிந்தைபோன் மலர்ந்தசெங் கமலம்
உவமை யில்பரம் பொருளுணர்ந் துரையிறந்த திருந்தோர்
மவுன வாயென வடங்கின மலர்ந்தபைங் குமுதம்.

     (இ - ள்.) வெம்கவன பரிசெலுத்தி - மிக்கவேகத்தினையுடைய
குதிரைகளைப் பாண்டியனுக்குச் செலுத்துதலால், மேல் கவலை தீர்ந்து -
இனி வருங்கவலை நீங்கி, உள்ளே சிவம் உணர்ந்தவர் சிந்தைபோல் -
அகத்தின்கண் சிவபிரானை யுணர்ந்த மணிவாசகனார் இதயம் போல,
செங்கமலம் மலர்ந்த - செந்தாமரைகள் மலர்ந்தன; உவமைஇல் பரம்பொருள்
உணர்ந்து - உவமையில்லாத அப்பரம் பொருளை உணர்ந்து, உரை இறந்து
இருந்தோர் மவுனவாய் என - சொல்லிறந் திருந்த அவ்வடிகளின்
மவுனத்தயுடைய வாய் போல, மலர்ந்த பைங்குமுதம் அடங்கின - (இரவில்)
மலர்ந்திருந்த பசிய குமுதமலர்கள் கூம்பின.

     வாதவூரர் பொருட்டே இறைவன் பரிசெலுத்தினமையால் அவர்
மேலேற்றிக்கூறினார்; இறுத்து என்றுமாம். பரிசெலுத்தி என்பதற்கு வாசியை
மேனோக்கிச் செலுத்தி எனவும் ஒரு பொருள் கொள்க. உள்ளே
சிவமுணர்ந்தவர் என்றது சிவயோகிகளையும், பரம்பொருளுணர்ந்து
உரையிறந்திருந்தோர் என்றது சிவ ஞானிகளையும் பொதுமையில்
உணர்த்துவனவாகக் கோடலுமாம். மலர்ந்த இரண்டனுள் முன்னது முற்று
பின்னது எச்சம். (35)

பந்தி யாளர்கள் யாதெனப் பகர்துமென் றச்சஞ்
சிந்தி யாவெழுந் தொல்லைபோய்த் திரண்மதங் கவிழ்க்குந்
தந்தி யானர சிறைகொளு மிருக்கையைச் சார்ந்து
வந்தி யாவுடல் பனிப்புற வந்தது மொழிவார்.