பரி நரியாக்கி வையை யழைத்த படலம் 319



"அகங் குன்றி - மூக்கிற் கரியா ருடைத்து"

என்னும் திருக்குறளிலுங் காண்க. மதிநூல் - நீதிநூல்; இயற்கை யறிவுடன்
நூலறிவு சான்றவர் என்றுமாம். (40)

இம்மாயஞ் செய்தானை யென்செய்வ தெனவுலகி லெமருக் கெல்லாம்
வெம்மாசு படுபாவம் பழியிரண்டும் படவிழுக்கு விளைத்துத் தீய
கைம்மாறு கொன்றான்றன் பொருட்டினியா மேதுரைக்கக் கடவே
                                               மென்று
சும்மாது சிரந்தூக்கி யெதிராடா திருந்தாரச் சூழ்வல் லோர்கள்.

     (இ - ள்.) இம்மாயம் செய்தானை - இவ்வஞ்சகஞ் செய்த
வாதவூரனை, என் செய்வது என - என்ன செய்யலாமென்று மன்னன் வினவ,
அச்சூழ்வல்லோர்கள் - அச்சூழ்ச்சி வல்லுநராகிய அமைச்சர்கள், உலகில் -
இந்நிலவுலகின்கண், எமருக்கு எல்லாம் - எம்போன்ற அமைச்சருக்கெல்லாம்,
வெம் மாசுபடு பாவம் பழி இரண்டும்பட - கொடிய களங்கம் பொருந்திய
பாவமும் பழியுமாகிய இரண்டும் உண்டாக, இழுக்கு விளைத்து -
குற்றஞ்செய்து, தீயகைம்மாறு கொன்றான் தன் பொருட்டு - கைம்மாறு
கொன்ற தீயோனாகிய வாதவூரன் பொருட்டு, இனி நாம் ஏது உரைக்கக்
கடவேம் என்று - யாம் இனி என்ன சொல்லக் கடவேமென்று கருதி,
எதிராடாது சும்மாது சிரம் தூக்கி இருந்தார் - விடைகூறாது வாளா தலை
குனிந்து இருந்தனர்.

     அமைச்சருள் ஒருவர் புரிந்த தீமையால் அமைச்சர் சாதிக்கே
பாவமும் பழியு முண்டாமெனக் கருதினர். கைம்மாறு - எதிர் நன்றி; ஈண்டு
நன்றியென்னும் பொருட்டு. கொன்ற தீயன் என விகுதி பிரித்துக்கூட்டுக.
சும்மாது, து பகுதிப் பொருள் விகுதி; ‘வாளாது’ என்புழிப்போல. தூக்கல் -
தொங்கவிடல். சூழ் - சூழ்ச்சி, முதனிலைத்தொழிற்பெயர். அமைச்சர் தமை
நோக்கி என்செய்வதென அவர்கள் எதிராடா திருந்தனர் என முடிக்க. (41)

அவ்வேலை மனக்கினிய பரிசெலுத்தி யரசகா ரியநன் றாக்கி
வெவ்வேலை மனக்கவலை விடுத்தனமென் றகமகிழ்ச்சி விளைவு கூர
மைவ்வேலை விடமுண்ட வானவனை நினைந்தறிவு மயமா மின்ப
மெய்வேலை யிடைவீழ்ந்தார் விளைந்ததறி யார்வந்தார் வேந்தன்
                                                மாடே.

     (இ - ள்.) அவ்வேலை - அப்பொழுது, மனக்கு இனிய பரி செலுத்தி
- மனத்துக்கு இனிய குதிரைகளைச் செலுத்தி, அரசகாரியம் நன்றாக்கி -
அரச கருமத்தைச் செவ்வனே முடித்து, வெவ்வேலை மனக்கவலை
விடுத்தனம் என்று - கடல்போன்ற கொடிய மனக்கவலையை நீக்கினேமென்று
கருதி, அகம் மகிழ்ச்சி விளைவுகூர - மனவகத்தின்கண் மகிழ்ச்சி மிக, மை
வேலை விடம் உண்ட வானவனை நினைந்து - கரிய கடலின் நஞ்சினை
உண்ட இறைவனை நினைந்து, அறிவுமயமாம் மெய் இன்ப வேலை யிடை
வீழ்ந்தார் - ஞானமயமாகிய அழியாத பேரின்பக் கடலுள் வீழ்ந்த அடிகள்,
விளைந்தது அறியார் - நிகழந்த செயலினை அறியாமல், வேந்தன்மாடு
வந்தார் - அரசனிடம் வந்தனர்.