320திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     மனக்கு, அத்துச் சாரியை தொக்கது. மெய் அறிவு இன்ப மயமாம்
வேலை எனக்கொண்டு கூட்டி, சச்சிதானந்த சொரூபமாகிய கடல்
என்றுரைத்தலுமாம். (42)

வந்தவரைச் சிவந்தவிழிப் பொறிசிதறக் கடுகடுத்து மறவோ னோக்கி
அந்தமிலாப் பொருள்கொடுபோய் நல்லவயப் பரிகொடுவந் தழகி
                                                 தாகத்
தந்தனையன் றோவரச கருமமுடித் திசைநிறுத்தத் தக்கோர் நின்போல்
எந்தவுல குளரேயோ வெனவெகுண்டா னதுகேட்ட வீசன் றொண்டர்.

     (இ - ள்.) வந்தவரை - அங்ஙனம்வந்த வாதவூரடிகளை, சிவந்த
விழிப் பொறி சிதற - சிவந்த கண்களினின்றும் தீப்பொறி சிதறுமாறு,
மறவோன் கடுகடுத்து நோக்கி - மறத்தினையுடைய பாண்டியன் சினந்து
பார்த்து, அந்தம் இலாப் பொருள் கொடுபோய் - அளவிறந்த பொருள்களை
எடுத்துக் கொண்டுபோய், நல்ல வயப்பரி கொடுவந்து - நல்ல
வெற்றியையுடைய குதிரைகளைக் கொண்டுவந்து, அழகிதாகத்தந்தனை
அன்றோ - அழகாகக்கொடுத்தாயல்லவா, அரசகருமம் முடித்து
இசைநிறுத்தத்தக்கோர் - (அதனால்) வேந்தன் வினைகளை முடித்துப் புகழை
நிறுவ வல்ல தக்கோர், நின்போல் எந்த உலகு உளரேயோ என
வெகுண்டான் - நின்னைப் போல் எந்தவுலகில் உள்ளாரோவென்று சினந்து
கூறினான்; அது கேட்ட ஈசன் தொண்டர் - அதனைக்கேட்ட இறைவன்
தொண்டராகிய அடிகள்.

     அழகிதாகத் தந்தனையன்றோ, இசை நிறுத்தத்தக்கோர் நின்போல்
எந்த வுலகுளரேயோ என்பன வெகுளியால் வந்த இகழ்ச்சிக்குறிப்பு.
மறவோன் வந்தவரை நோக்கி அன்றோ உளரேயோ என வெகுண்டான்
என முடிக்க. (43)

குற்றமே தப்புரவிக் கெனக்கேட்டார் கோமகனுங் குற்ற மேதும்
அற்றதா லரையிரவி னரியாகி யயனின்ற புரவி யெல்லாஞ்
செற்றுவார் குருதியுக நிணஞ்சிதறக் குடர்பிடுங்கித் தின்று நேர்வந்
துற்றபேர்க் கூற்றமிழைத் தூர்கலங்கக் காட்டகத்தி லோடிற் றன்றே.

     (இ - ள்.) அப்புரவிக்குக் குற்றம் ஏது எனக்கேட்டார் -
அக்குதிரைகளுக்குக் குற்றம் என்ன வென்று கேட்டனர்; கோமகனும் -
மன்னனும், அரை இரவில் நரியாகி - நள்ளிரவில் நரிகளாய், அயல் நின்ற
புரவி எல்லாம் செற்று - மருங்கில் நின்ற குதிரைகளை எல்லாம் கொன்று,
வார்குருதிஉகநிணம் சிதற - நிறைந்த குருதி ஒழுகவும் நிணங்கள் சிதறவும்,
குடர்பிடுங்கித்தின்று - அவற்றின் குடர்களைப் பிடுங்கித்தின்று விட்டு,
நேர்வந்து உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து - நேரில் வந்த மக்களுக்கு
இடையூறு செய்து, ஊர்கலங்கக் காட்டகத்தில் ஓடிற்று - ஊரிலுள்ளவர்கள்
மனங்கலங்கக் காட்டின்கண் ஓடின; குற்றம் ஏதும் அற்றது - (இதுவன்றி)
குற்றஞ் சிறிதுமில்லாதனவே.