324திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) அத்தவோ - எப்பொருட்கும் இறைவனே, கல்லாக்
கடையேனை ஆட்கொண்ட பித்தவோ - கல்லாத புல்லறிவினையுடைய
என்னை ஆண்டு கொண்ட பித்தனே, பொய் உலகை மெய்யாகப் பேதிக்கும்
சித்தவோ - பொய்யாகிய உலகினை மெய்யாகக் கருதும் வண்ணம்
பேதப்படுக்குஞ் சித்த வடிவினனே, சித்தம் தெளிவித்து எனைத் தந்த
முத்தவோ - அடியேன் மயக்க வுணர்வினைத் தெளிவித்து என்னை
யுணர்த்திய முத்தி வடிவானவனே, மோன மயமான மூர்த்தியவோ -
மௌனவடிவினையுடைய மூர்த்தியே.
"கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை"

"கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை"

என அடிகள் திருவாசகத்தில் அருளிச் செய்தல் காண்க.
கரணங்களெல்லாவற்றிலும் இறைவன் கலந்து நிற்றலின் ‘சித்தவோ’
என்றார்.

"கூறு நாவே முதலாகக் கூறுங் கரண மெல்லாநீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதுநீ"

என்னும் திருவாசகங் காண்க. சித்தன் - சித்தி வல்லோன் என்றுமாம்.
எனைத் தந்த என்பதற்கு எனக்குச் சிவமாந் தன்மையைத் தந்தருளிய
என்றுரைத்தலுமாம்.

"சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
     வித்தகத் தேவர்"
"சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட
     அத்தன்"

என்னும் திருவாசகங்கள இங்கே சிந்திக்கற் பாலன. (50)

       [ஒருபோகு கொச்சகக் கலிப்பா]
என்றேறிய புகழ்வேதிய ரிரங்குந்துதி செவியிற்
சென்றேறலும் விடையேறுசுந் தரன்மற்றிவர் செயலை
மன்றேறவு முடிமேனதி மண்ணேறவு முதியாள்
அன்றேறிய தேரோடும்விண் ணடைந்தேறவு நினைந்தான்.

     (இ - ள்.) என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும்துதி - என்று மிக்க
புகழ் வாய்ந்த மறையோராகிய வாதவூரடிகள் அழுது முறையிடுந்துதி, சென்று
செவியில் ஏறலும் - சென்று திருச் செவியின்கண் புகுந்த வளவில், விடை
ஏறு சுந்தரன் - ஆனேற்றின்மேல் ஏறியருளுஞ் சோமசுந்தரக் கடவுள், இவர்
செயலை மன்தேறவும் - இவ்வடிகள் செயலை அரசன் தெளியவும்; முடிமேல்
நதி மண் ஏறவும் - தனது திருமுடியின்கண் வையையாற்றின் மண் ஏறவும்,
முதியாள் - முதுமைப் பருவமுடைய வந்தி யென்பாள், அன்று -
அஞ்ஞான்று, ஏறியதேரோடும் விண் அடைந்து ஏறவும் - தான் ஏறிய
விமானத்துடன் சிவபுரத்தை அடையவும், நினைந்தான் - திருவுளங்
கொண்டருளினான்.

     ஏறிய புகழ் - மிக்க புகழ். செயல் - பெருமை. (51)