கங்கைப்புனல் வடிவாகிய கவ்வைதிரை வையைச்
சங்கச்சரி யறலாமலர்த் தாரோதியை நோக்கா
வங்கக்கடல் பேரூழியில் வருமாறென வெவரும்
இங்கற்புத மடையப்பெரு கென்றானருள் குன்றான். |
(இ
- ள்.) கங்கைப்புனல் வடிவாகிய - கங்கை நீரின் வடிவாகிய.
கவ்வைத் திரை வையை - ஒலியினை யுடைய அலைகள்வீசும் வையை
நதியாகிய, சங்கச்சரி - சங்காகிய வளையலையும், அறலாம் மலர்த்தார்
ஓதியை நோக்கா - கருமணலாகிய மலர் மாலையை யணிந்த
கூந்தலையுமுடைய பெண்ணை நோக்கி, வங்கக் கடல் பேர் ஊழியில்
வருமாறு என - கப்பல்களையுடைய கடல் பெரிய ஊழிக் காலத்தின் கண்
பெருகி வருந் தன்மைபோல, இங்கு எவரும் அற்புதம் அடைய - இவ்வுலகி
லுள்ளாரனைவரும் வியப்பினை அடையுமாறு, பெருகு என்றான் -
பெருகிவரக் கடவை யென்றருளிச் செய்தனன்; அருள்குன்றான் - பேரருள்
குன்றாத இறைவன்.
வையை
கங்கைப் புனல் வடிவாகியதனை அன்னக்குழியும் வையையும்
அழைத்த படலத்திற் காண்க. ஓதி. ஆகு பெயர். (52)
தும்பைச்சடை முடியானொரு சொல்லாடவு முன்னாள்
வம்பைப்பொரு முலையால்வரி வளையால்வடு வழுத்துங்
கொம்பைத்தவங் குலைப்பான்கடுங் கோபங்கொடு நடக்குங்
கம்பைப்பெரு நதியிற்கடுங் கதியால்வரும் வையை. |
(இ
- ள்.) தும்பைச்சடை முடியான் ஒரு சொல் ஆடவும் - தும்பை
மலர் மாலையை யணிந்த சடை முடியையுடைய அச்சோமசுந்தரக் கடவுள்
இங்ஙனம் ஒரு சொல்லினைச் சொன்னவளவில், முன்நாள் - பண்டொரு
நாளில், வம்பைப் பொரு முலையால் வரிவளையால் - கச்சினைப்
பொருகின்ற கொங்கைகளாலும் வரி யமைந்த வளைகளாலும், வடு அழுத்தும்
கொம்பை - இறைவன் மேனியில் வடுப்படுமாறு அழுத்திய உமைப்
பிராட்டியின், தவம் குலைப்பான் - தவத்தை அழிக்கும் பொருட்டு, கடும்
கோபம் கொடு நடக்கும் - மிக்க சினங் கொண்டு நடக்கும், பெருங்கம்பை
நதியில் - பெரிய கம்பை யாற்றைப்போல, வையை கடுங்கதியால் வரும் -
வையையாறு கடிய செலவுடன் வாரா நின்றது.
முலையாலும்
வளையாலும் என்னும் எண்ணும்மைகள் தொக்கன.
கொம்பு - பூங்கொம்புபோல்வாராகிய உமாதேவியார். தவம் குலைப்பான்
என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு இரண்டாவதற்கு முடிபாக்கலுமாம்.
குலைப்பான், வினையெச்சம். கதியால் - கதியுடன். ஒரு காலத்தில்
இறைவனைப் பிரியலுற்ற இறைவி மீண்டும் இறைவனை அடைதற் பொருட்டுக்
காஞ்சிப் பதியிலே மணலாற் சிவலிங்கம் தாபித்து வழிபட்டு வந்த காலை
இறைவனால் ஏவப்பெற்ற கம்பை நதி பெருகி வந்து அதனை அழிக்கலுற,
அம்மை சிவலிங்கப் பெருமானைக் கட்டி யணைத்தமையால் இறைவற்கு
முலைத்தழும்பும் வளைத்தழும்பும் உண்டாயின என்பது வரலாறு. (53)
|