மண் சுமந்த படலம்333



அடக்குவீராக என்று கூற, அமைச்சரும் தொழுது போயினார் - மந்திரிகளும்
வணங்கிப் போனார்கள்.

     பரவை - பரப்பு. கரை சுமந்து - கரைபோட்டு; இயற்றுதற் கருத்தாவின்
தொழிலை ஏவுதற் கருத்தாவின்மேல் வைத்துக் கூறினார். பொரும் -
மோதும், போர்செய்யும். கதம் - விரைவு, கோபம். (2)

வெறித்த டக்கைமத யானை மந்திரிகள் வேறு வேறுபல குடிகளுங்
குறித்தெ டுத்தெழுதி யெல்லை யிட்டளவு கோல்கி டத்திவரை கீறியே
அறுத்து விட்டுநக ரெங்க ணும்பறை யறைந்த ழைத்துவிடு மாளெலாஞ்
செறித்து விட்டவ ரவர்க்க ளந்தபடி செய்மி னென்றுவரு வித்தனர்.

     (இ - ள்.) வெறித்தடக்கை மதயானை மந்திரிகள் - மதவெறியினையும்
பெரிய துதிக்கையினையுமுடைய யானையையுடைய அமைச்சர்கள், வேறு
வேறு பல குடிகளும் - வெவ்வேறு வகைப்பட்ட பல குடிகளையும், குறித்து
எடுத்து எழுதி - ஆராய்ந்து எடுத்து எழுதி, எல்லையிட்டு - தொகை
முடிவுகட்டி, அளவு கோல் கிடத்தி வரைகீறி அறுத்து விட்டு - அளவுகோல்
போட்டு அளந்து கோடு கிழித்து வரையறுத்து, நகர் எங்கணும் பறை
அறைந்து அழைத்து - நகர் முழுதும் பறை சாற்றி அழைத்து, விடும் ஆள்
எலாம் செறித்து விட்டு - அவ்வக் குடிகள் விட்ட கூலியாட்களை யெல்லாம்
ஓரிடத்தல் தொகவைத்து, அவர் அவர்க்கு அளந்தபடி செய்மின் என்று
வருவித்தனர் - அவரவர்க்கு அளந்து வரையறுத்தபடி செய்யுங்கள் என்று
கூறி அவ்வவ்விடத்துக்கு அவரவரை வரவழைத்தனர்.

     அவரவர் அணைகோலுதற்குரிய பங்கினை அளந்து வரையறுத்து
என்க. பறை யறைந்து என்பது அரசனெடுத்த ஆலயம் என்புழிப்போலப்
பிறவினை விகுதி தொக்கு நின்றது. (3)

மண்டொ டுங்கருவி கூடை யாளரு மரஞ்சு மந்துவரு வார்களும்
விண்டொ டும்படி நிமிர்ந்து வண்டுபடு விரிபசுந் தழைப லாலமுங்
கொண்ட திர்த்துவரு வாரும் வேறுபல கோடி கூடிய குழாமுநீர்
மொண்ட ருந்தவரு மேக சாலமென வருபு னற்கரையின் மொய்த்தனர்.

     (இ - ள்.) மண்தொடும் கருவி கூடையாளரும் - மண்வெட்டுங்
கருவியுடன் கூடையுங் கொண்டுவருவார்களும், மரம் சுமந்து வருவார்களும்
- மரங்களைச்சுமந்து வருவார்களும், விண்தொடும்படி நிமிர்ந்து வண்டுபடு
விரிபசுந்தழை - வானையளாவுமாறு ஓங்கி வண்டுகள் மொய்த்த விரிந்த
பசிய தழையையும், பலாலமும்கொண்டு அதிர்த்துவருவாரும் -
வைக்கோலையும் சுமந்து கொண்டு ஆரவாரஞ் செய்து வருவார்களும்,
வேறுபல கோடி கூடிய குழாமும் - இவர்கட்கு வேறாகப் பலகோடி யாகத்
திரண்ட கூட்டங்களுமாய், நீர் மொண்டு அருந்த வரும் மேகசாலம் என -