34திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) நாமகள் வரவு தாழ்ப்ப - வாணியின் வரவு தாழ்த்தலினால்,
நங்கையர் இருவரோடும் - மற்றை இரண்டு மடந்தையரோடும், தாமரைக்
கிழவன் மூழ்கி - தாமரை மலரில் இருக்கும் பிரமன் நீராடி, தடம்கரை
ஏறும் எல்லை - பெரிய கரையில் ஏறுங்கால், பாமகள் குறுகி - கலைமகள்
சென்று, என்னை அன்றி நீ படிந்தவாறு என்னாம் என வெகுண்டாள் -
என்னை யல்லாது நீ நீராடியது என்னை என்று சினந்தாள்; கேட்ட
அம்புயத்து அண்ணல் சொல்வான் - அதனைக் கேட்ட பிரமன்
கூறுவான். (5)

குற்றநின் மேல தாக நம்மைநீ கோபங் கொள்வ
தெற்றென வினைய தீங்கை யெண்ணறு மாக்க டோற்றம்
உற்றனை யொழித்தி யென்னா உரைத்தனன் சாப மேற்கும்
பொற்றொடி மடந்தை யஞ்சிப் புலம்புகொண் டவலம் பூண்டாள்.

     (இ - ள்.) குற்றம் நின்மேலது ஆக - குற்றம் நின்கண்ணதாக,
நம்மை நீ கோபம் கொள்வது எற்றுஎன - எம்மை நீ வெகுள்வது
எத்தன்மைத்து என்று கூறி, இனைய தீங்கை - இந்தக் குற்றத்தை, எண்அறு
மாக்கள் தோற்றம் உற்றனை ஒழித்தி என்னா சாபம் உரைத்தனன் -
நாற்பத்தெட்டு மக்களாகத் தோன்றி ஒழிப்பா யென்று சாபங் கூறினன்;
ஏற்கும் பொன்தொடி மடந்தை - அச்சாபத்தை ஏற்கும் பொன்னாலாகிய
வளையை யணிந்த கலைமகள், அஞ்சிப் புலம்பு கொண்டு அவலம்
பூண்டாள் - அஞ்சிப் புலம்பித் துன்பமுற்றாள்.

     இனைய தீங்கு - வரவு தாழ்த்த குற்றமும், கோபங் கொண்ட
குற்றமும். (6)

ஊனிட ரகன்றோ யுன்னா ருயிர்த்துணை யாவே னிந்த
மானிட யோனிப் பட்டு மயங்குகோ வென்ன வண்டு
தேனிடை யழுந்தி வேதஞ் செப்பும்வெண் கமலச் செல்வி
தானிட ரகல நோக்கிச் சதுர்முகத் தலைவன் சாற்றும்.

     (இ - ள்.) ஊன்இடர் அகன்றோய் - உடம்பெடுத்தலாலுளதாகிய
துன்பம் நீங்கியோய், உன் ஆர் உயிர்த்துணை ஆவேன் - உனது அரிய
உயிர்த்துணை ஆகும் யான், இந்த மானிட யோனிப்பட்டு மயங்குகோ என்ன
- இந்த மனித்தப்பிறப்பின் பாற்பட்டு மயங்குவேனோ என்று கூற, வண்டு
தேன்இடை அழுந்தி வேதம் செப்பும் - வண்டுகள் தேனில் மூழ்கி வேதம்
பாடுவதற்கிடமாயுள்ள; வெண்கமலச் செல்வி - வெண்டாமரை மலரை
இருக்கையாகவுடைய அக் கலைமகளின், இடர் அகல நோக்கி - துன்பம்
நீங்க நோக்கி, சதுர்முகத்தலைவன் சாற்றும் - நான்முகனாகிய நாயகன்
கூறுவான்.

     அயன் பிறப்பில்லாதவன் என்னுங் கருத்தால் ஊனிட ரகன்றவன்
எனப்பட்டான். மனிதப் பிறப்பின் துன்பத்தை யறியாத உனக்கு
உயிர்த்துணையாகிய யான் அத்துன்பத்துள் அழுந்துதல் முறையோ என்றாள்
என்க. அவள் இருக்கையாகிய கமலத்து வண்டு வேதஞ் செப்பும் எனவே
அவள் வேதஞ் செப்புதல் கூற வேண்டாதாயிற்று. (7)