மண் சுமந்த படலம்341



அன்னையெனத் தன்பாலின் னருள்சுரந்து வருகாளை
தன்னையழைத் தெனக்களந்த கரையடைத்துத் தருவாயோ
என்னவிசைத் தனளாக வடைக்கின்றே னெனக்கன்னை
பின்னையதற் கிடுங்கூலி யாதென்றார் பெருமுதியாள்.

     (இ - ள்.) அன்னை எனத் தன்பால் இன் அருள் சுரந்து வருகாளை
தன்னை அழைத்து - தாய்போலத் தன்கண் இனிய அருள் சுரந்து வரும்
காளைப் பருவமுடையாரை அழைத்து, எனக்கு அளந்த கரை அடைத்துத்
தருவாயோ என்ன இசைத்தனளாக - என் பங்குக்கு அளந்து விட்ட
கரையினை அடைத்துத் தருவாயோ என்று வினவினளாக; அன்னை - தாயே,
அடைக்கின்றேன் - அடைத்துத் தருவேன், பின்னை - அடைத்தபின்,
எனக்கு அதற்கு இடும் கூலியாது என்றார் - எனக்கு அதற்காகக் கொடுக்குங்
கூலி யாது என்று கேட்டனர்; பெருமுதியாள் - பெரிய அம்முதியவள்.

     அன்னையென அருள் சுரந்து எனலும், அன்னை யென அழைத்து
எனலும் பொருந்தும். (20)

பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற்
சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம்
இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக்
கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார்.

     (இ - ள்.) உனக்குப் பிட்டு இடுவேன் என்றாள் - உனக்குக்
கூலியாகப் பிட்டுத் தருவேனென்று கூறினள்; கரை இல்லார் அதற்கு
இசைந்து - எல்லையில்லாத இறைவர் அதற்கு உடன் பட்டு, பெரும்பசியால்
சுட்டிடநான் மிகமெலிந்தேன் - பெரிய பசித்தீ என்னைச்சுட அதனால் யான்
மிக இளைத்தேன்; முந்த - யான் வேலை செய்தற்கு முன்னரே, சுவைப்
பிட்டில் உதிர்ந்த வெலாம் - சுவை மிக்க பிட்டில் உதிர்ந்த பிட்டு முழுதும்,
இட்டிடுவாய் - தருவாயாக; அது தின்று நான் இளைப்பாறி - அதனைத்
தின்று நான் சிறிது இளைப்பாறிக்கொண்டு, நின்னுடைய கரை கட்டிடுவேன்
என்றார் - நினது பங்குக் கரையைக் கட்டுவேனென்று கூறினர்.

     பசி சுட்டிட அதனால் எனச் சுட்டுப் பெயர் வருவித்து உருபு பிரித்
தொட்டுக. சுட்டிட முதலியவற்றில் இடு துணைவினை. கரையில்லார் -
அளவைகளால் அளக்கப்படும் வரம்பு இல்லாதவர். (21)

தெள்ளியடு சிற்றுண்டி சிக்கடைந்த பொதிநீக்கி
அள்ளியெடுத் தருந்தப்பா வென்றிட்டா ளரைக்கசைத்த
புள்ளியுடைத் துகினீத்தார் புறத்தானை விரித்தேந்தி
ஒள்ளியதென் றவளன்பு முடன்கூட்டி யமுதுசெய்வார்.