(ஆனதால்), இனி வேலைத்தலைச்
சென்று - இனி வேலை நடக்குமிடஞ்
சென்று, உன் சிந்தை களிப்பு எழ - உன் மனம் மகிழ்ச்சி மிக, வேலை
செய்வேன் என்று இசைத்து எழுந்தார் - வேலை செய்வே னென்று கூறி
எழுந்தனர்.
தந்தை
தாய் இல்லாத எனக்கு எனக் கூறுவது அழகிது; இறைவன்
பிறவா யாக்கைப் பெரியோன் ஆகலின் அவற்குத் தந்தை தாய் இன்மை
அறிக;
"தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி" |
என்பது திருவாசகம்.
வேலைத்தலை - வேலை செய்யுமிடம். (24)
தந்திவாய் மருப்பிடறி வருங்குடிஞைத் தடங்கரையில்
வந்தியான் வந்தியா ளென்றேட்டில் வரைவித்துப்
புந்தியா லுரையானூற் பொருளினா லளப்பரிய
அந்திவான் மதிச்சடையார் கரையடைப்பா ராயினார். |
(இ
- ள்.) தந்திவாய் மருப்பு இடறிவரும் - யானையின் வாயிலுள்ள
கொம்பினை இடறிக் கொண்டு வருகின்ற, குடிஞைத் தடம் கரையில் வந்து
-வையை யாற்றினது பெரிய கரையின்கண் வந்து, யான் வந்தி ஆள் என்று
ஏட்டில் வரை வித்து - யான் வந்தியின் கூலியாள் என்று கணக்கில்
எழுதுவித்து, புந்தியால் உரையால் நூற்பொருளினால் அளப்பரிய -
மனத்தினாலும் மொழியாலும் நூற் பொருளினாலும் அளந்து காண்டற் கரிய,
அந்திவான் மதிச் சடையார் - செக்கர் வானிற் றோன்றும் பிறையினை
யணிந்த சடையை யுடைய இறைவர், கரை அடைப்பார் ஆயினார் -
கரையினை யடைக்கத் தொடங்கினார்.
வந்தியான்
என்பதில் குற்றியலிகரம் அலகு பெற்றது. எண்ணும்மைகள்
தொக்கன. (25)
வெட்டுவார் மண்ணைமுடி மேல்வைப்பார் பாரமெனக்
கொட்டுவார் குறைத்தெடுத்துக் கொடுபோவார் சுமடுவிழத்
தட்டுவார் சுமையிறக்கி யெடுத்ததனைத் தலைபடியக்
கட்டுவா ருடன்சுமந்து கொடுபோவார் கரைசொரிவார். |
(இ
- ள்.) மண்ணை வெட்டுவார் - மண்ணினை வெட்டுவார்; முடி
மேல் வைப்பார் - அதனைத் தூக்கி முடியின்கண்வைப்பார்; பாரம்
எனக்கொட்டுவார் - பாரம் அதிகமென்று கூறிக் கீழே கொட்டுவார்;
குறைத்து எடுத்துக் கொடுபோவார் - அதனைக்குறைத்து எடுத்துக்கொண்டு
போவார்; சுமடுவிழத்தட்டுவார் - சும்மாடு விழுமாறு தட்டுவார்; சுமை இறக்கி
அதனை எடுத்துத் தலைபடியக்கட்டுவார் - சுமையைக் கீழே இறக்கி வைத்து
அச்சும்மாட்டினை எடுத்துத் தலையிற் படியுமாறு கட்டுவார், உடன்
சுமந்துகொடுபோவார் கரை சொரிவார் - விரைந்து - சுமந்து கொண்டு
போய்க் கரையிற் கொட்டுவார்.
சுமடு
- சுமையடை; சும்மாடு. (26)
|