மண் சுமந்த படலம்345



     (இ - ள்.) அத்தருவே நெடும் ஆலந்தருவாக - அந்த மரமே நீண்ட
வடவால மரமாக, அலைபுரட்டித் தத்திவரும்புனல அடைப்பார் -
அலைகளை வீசித் தத்திக் கொண்டு வரும் நீரை அடைப்பவர்களே, சனக
ஆதி முழுது உணர்ந்த மெய்த்தவ ராய்க் கண் களிப்ப - சனகன் முதலாகிய
முற்று முணர்ந்த உண்மைத்தவ முடையாராகிக் கண் களிகூர, மெய்
உணர்ச்சி மோனமய சுத்த உருத் தெளிவிப்பார் என - மெய்யுணர்வால்
பெறப்படும் மோனமயமாகிய தமது தூய அருளுருவினைத் தெளிவிப்பாரைப்
போல, துயிலும் துயில் உணர்ந்தார் - தூங்கும் தூக்கத்தினின்றும் விழித்தனர்.

     முழுதுணர்ந்த சனகாதி மெய்த்தவராய் என மாறுக. மோன
நிலையிலிருந்து தெளிவிப்பாரெனத்துயிலும் துயில் என்க. (29)

ஆடுவார் சாமமெனத் தித்திக்கு மமுதவிசை
பாடுவார் நகைசெய்வார் தொழில்செய்வார் பராக்கடையக்
கோடுவார் மணல்குவிப்பார் குதிப்பார்தூ ளெழவடிபாய்ந்
தோடுவா ருடன்மீள்வா ருன்மத்த ரெனவிருப்பார்.

     (இ - ள்.) ஆடுவார் - கூத்தாடுவார்; சாமம் எனத் தித்திக்கும் அமுத
இசை பாடுவார் - சாமவேதத்தைப்போலச் சுவைபயக்கும் அமுதம் போலும்
இசையினைப்பாடுவார்; நகை செய்வார் - சிரிப்பார்; தொழில் செய்வார்
பராக்கு அடைய - வேலை செய்பவர்கள் பராக்கினை அடையுமாறு, வார்
கோடு மணல் குவிப்பார் குதிப்பார் - நீண்ட கரையின்கண் மணலைக்
குவித்துத் தாண்டுவார்; அடிதூள் எழ பாய்ந்து ஓடுவார் - காலிலுள்ள துகள்
மேலே எழுமாறு பாய்ந்து ஓடுவார்; உடன் மீள்வார் - உடனே திரும்புவார்;
உன்மத்தர் என இருப்பார் - உன் மத்தரைப் போலப் பேசாமல் இருப்பார்.

     பராக்கடைய என்பதனை ஆடுவார் முதலியவற்றுக்கும் காரியமாக்குக.
பராக்கு அடைய - பராக்குப் பார்க்க; தமது தொழிலை விட்டு வேடிக்கை
பார்க்க. (30)

வேலையினா லறவருந்தி யிளைத்தார்போன் மெய்வேர்வை
காலமிசை மூச்செறிந்து வாயொலியாற் காற்றழைத்துச்
சாலநெடும் பசியினர்போற் றளர்ந்தடியா ளிடும்பிட்டின்
மேலடைந்த விருப்பினராய் மீண்டுமவள் பாலணைவார்.

     (இ - ள்.) வேலையினால் அறவருந்தி இளைத்தார் போல் -
வேலையினாலே மிகவும் வருந்தி மெலிந்தவர் போல, மெய் வேர்வை கால -
உடல் வேர்வையினைச் சிந்த, மிசை மூச்சு எறிந்து - மேல் மூச்சு விட்டு,
வாய்ஒலியால் காற்று அழைத்து - வாயைக்குவித்துச்செய்யும் ஒலியினால்
காற்றினை அழைத்து, சால நெடும் பசியினர் போல் தளர்ந்து - மிகவும்
நீண்டகாலத்துப் பசியுடையார்போலத் தளர்வுற்று, அடியாள் இடும்பிட்டின்
மேல் அடைந்த விருப்பினராய் - அடியாளாகிய வந்தி கொடுக்கும் பிட்டின்
கண்சென்றடைந்த விருப்பினை யுடையவராய், மீண்டும் அவள் பால்
அணைவார் - மீளவும் அவளிடஞ் செல்வாராயினர்.