மண் சுமந்த படலம்353



வேளையும் வனப்பி னாலே வென்றவ னொருவன் வந்தி
ஆளென வங்கே வந்து பதிந்தன னரசர் செல்வக்
காளைபோற் களிப்பன் பாடு மாடுவன் காலம் போக்கி
நீளுவன் வேலை யொன்று நெஞ்சினு நினைதல் செய்யான்.

     (இ - ள்.) வேளையும் வனப்பினாலே வென்றவன் ஒருவன் -
மதவேளையும் தன் அழகினாலே வென்ற ஒருவன், வந்தி ஆள் என
அங்கேவந்து பதிந்தனன் - வந்தியின் ஆள் என்று அங்கே வந்து கணக்கிற்
பதிவு செய்தனன்; அரசர் செல்வக் காளை போல் களிப்பன் - மன்னர்களின்
செல்வமிக்க புதல்வர்களைப் போலக் களி கூர்வன்; பாடும் - பாடுவான்;
ஆடுவன் - கூத்தாடுவான்; காலம் போக்கி நீளுவன் - காலத்தை வேலை
செய்யாமற் போக்கி நீட்டிப்பன்; வேலை ஒன்றும் நெஞ்சினும் நினைதல்
செய்யான் - வேலையை மட்டும் மனத்திலுங் கருதான்.

     காளை - காளை போலும் மைந்தர். நீளுவன் - நீட்டிப்பன் என்னும்
பொருட்டு. (48)

ஆண்டகை வனப்பை நோக்கி யடிக்கவுங் கில்லே மஞ்சி
ஈண்டினே மென்று கூற விம்மென வமைச்ச ரோடும்
பாண்டிய னெழுந்து நாம்போய்ப் பங்கடை பட்ட வெல்லாங்
காண்டுமென் றெறிநீர் வையைக் குடிஞையங் கரையைச் சார்ந்தான்.

     (இ - ள்.) ஆண்டகை வனப்பை நோக்கி அஞ்சி அடிக்கவும்
கில்லேம் - அவ் வாண்டகையின் பேரழகினைப் பார்த்து அஞ்சி அடித்தலும்
ஆற்றேமாய், ஈண்டினேம் என்று கூற - இங்கு வந்தோமென்று சொல்ல,
பாண்டியன் இம்மென அமைச்சரோடும் எழுந்து - பாண்டியன் விரைந்து
மந்திரிகளோடும் எழுந்து, நாம் போய்ப் பங்கு அடைபட்ட எல்லாம்
காண்டும் என்று - நாம் சென்று அடை பட்டனவாய பங்குகளை யெல்லாம்
காண்பேமென்று கூறி, எறிநீர் வையைக் குடிஞை அம்கரையைச் சார்ந்தான்
- அலைவீசும் நீரினையுடைய வையையின் அழகிய கரையினைச் சேர்ந்தான்.

     ஆண்டகை, அன்மொழித் தொகை. கில், ஆற்றலுணர்த்தும்
இடைநிலை; பொதுவே செய்தலென்னும் பொருட்டாயும் வரும். ஈண்டுதல் -
அணுகுதல். இம்மென, விரைவுக் குறிப்பு. அடைபட்ட பங்கு எல்லாம் என
மாறுக. (49)

எடுத்ததிண் கரைக ளெல்லா மிறைமக னுள்ளத் தோகை
மடுத்தன னோக்கிச் செல்வான் வந்திபங் கடைப்பா ரின்றி
அடுத்தநோன் கரையுங் கல்லி யழித்தெழு வெள்ள நோக்கிக்
கடுத்துநின் றெங்குற் றானிக் கரைசுமந் தடைப்பா னென்றான்.

     (இ - ள்.) எடுத்ததிண் கரைகள் எல்லாம் - உயர்த்தி
அடைக்கப்பட்ட திண்ணிய கரைகளனைத்தையும், நோக்கி உள்ளத்து ஓகை
மடுத்தனன் செல்வான் இறைமகன் - கண்டு மனமகிழ்ச்சி யுற்றுச்
செல்பவனாகிய மன்னன், வந்திபங்கு அடைப்பார் இன்றி - வந்தியின் பங்கு
அடைப்பவ