368திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



              [கொச்சகக் கலிப்பா]
அடையாளம் படவொருவ னடித்தகொடுஞ் சிலைத்தழும்புந்
தொடையாக வொருதொண்டன் றொடுத்தெறிந்த கல்லும்போற்
கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பு முலகமெல்லாம்
உடையானே பொறுத்ததோ வுன்னருமைத் திருமேனி.

     (இ - ள்.) உலகம் எல்லாம் உடையானே - உலக மனைத்தையும்
உடைய பெருமானே, உன் அருமைத் திருமேனி - உனது அருமைத்
திருமேனியானது, அடையாளம்பட ஒருவன் அடித்த கொடுஞ்சிலைத்
தழும்பும் - வடுப்படுமாறு அருச்சுனன் என்னும் ஒருவன் அடித்த வளைந்த
வில்லின் தழும்பையும், ஒரு தொண்டன் - ஒரு தொண்டனாகிய சாக்கிய
நாயனார், தொடையாகத் தொடுத்து எறிந்த கல்லும் போல் - மாலையாகத்
தொடுத்து வீசிய கல்லையும் பொறுத்தது போல, கடையானேன் -
கடையவனாகிய யான், வெகுண்டு அடித்த கைப் பிரம்பும் பொறுத்ததோ -
சினந்து அடித்த கைப் பிரம்பினையும் பொறுத்தருளியதோ.

     ஒருவன் - அருச்சுனன் : பாண்டு மைந்தனாகிய அருச்சுனன் பாசுபதப்
படை வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்த காலையில் அவனது
தவத்தை அழித்தற்குத் துரியோதனனது ஏவலால் பன்றி யுருவெடுத்து வந்த
மூகன் என்னும் அசுரனை இறைவன் வேட்டுருக்கொண்டு துரந்து வந்து அம்
பெய்து வீழ்த்தி அருச்சுனனோடு வழக்காடிப் போர் புரிந்து அவனது
வில்லின் நாணை அறுக்க அவன் விற்கழுந்தால் இறைவனை அடித்தான்
என்பது வரலாறு. ஒரு தொண்டன் - திருத்தொண்டர் புராணத்துக் கூறப்பட்ட
தனியடியார் அறுபத்து மூவருள் ஒருவராகிய சாக்கிய நாயனார்; திருச்சங்க
மங்கையிலே வேளாளர் குலத்துதித்த ஒருவர் மெய்யுணர்வு பெறக் கருதிச்
சாக்கிய (புத்த) மதத்தை அடைந்து, பின்பு சிவனருளால் சைவ நெறியே
உண்மை நெறியெனத் தெளிந்து "எந்நிலையில் நின்றாலும் எக்கோலம்
கொண்டாலும், மன்னிய சீர்க் சங்கரன்றாள் மறவாமை பொருள்" என்று
கருதிச் சாக்கிய வேடத்துடனிருந்தே சிவபிரான் பால் அன்புடையராய்
ஒழுகுகின்றவர் நாடோறும் சிவலிங்க தரிசனஞ் செய்து உண்ண விரும்பி
வெள்ளிடையிலிருந்த ஓர் சிவலிங்கத்தைக் கண்டு உவகை மீதூர்ந்து
திருவருட் குறிப்பால் அதன்மீது ஓர் கல்லினை யெடுத்தெறிந்து அன்று
முதல் அதுவே நியமமாகக் கல்லெறிந்து வழிபட்டு முத்தியடைந்தனர் என்பது
வரலாறு. பொறுத்ததோ, ஓகாரம் இரக்கத்தில் வந்தது. (79)

கடியேறு மலர்மகன்மான் முதலாய கடவுளரும்
படியேழு மளவிறந்த பல்லுயிரு நீயேயோ
முடியேற மண்சுமந்தாய் முதுகிலடி வடுப்பட்ட
தடியேனும் பட்டேனின் றிருமேனி யானேனோ.

     (இ - ள்.) முடி ஏற மண் சுமந்தாய் - முடியின்கண் ஏற மண்ணைச்
சுமந்த இறைவனே, கடி ஏறும் மலர் மகன் மால் முதலாய கடவுளரும் -
மணம் பொருந்திய தாமரை மலரில் இருக்கும் பிரமனும் திருமாலும் முதலிய