சங்கப்பலகை தந்த படலம்37



கலைநுண் தேர்ச்சிப்புலமையில் - பெருமை வாய்ந்த தமிழ்க்கலையின்
நுண்ணிய தேர்ச்சிப்புலமையில், தலைமை சார்ந்தார் - தலைமை பெற்றார்.

     மக்களாய்ப்பிறக்க அங்ஙனம் பிறந்த நாற்பத்தெண்மரும் தேர்ந்து
ஆய்ந்து தலைமை சார்ந்தார் என விரித்து முடித்துக்கொள்க. சிறப்புப்பற்றி
ஆரியமும் தமிழும் பிரித்தோதப்பட்டன. (11)

கழுமணி வயிரம் வேய்ந்த கலன்பல வன்றிக் கண்டிக்
கொழுமணிக் கலனும் பூணுங் குளிர்நிலா நீற்று மெய்யர்
வழுவறத் தெரிந்த செஞ்சொன் மாலையா லன்றி யாய்ந்த
செழுமலர் மாலை யானுஞ் சிவார்ச்சனை செய்யு நீரார்.

     (இ - ள்.) கழுமணி வயிரம் வேய்ந்த - (அவர்கள்) சாணைபிடித்த
மணிகளாலும் வயிரங்களாலும் புனைந்த, கலன் பல அன்றி - பல கலன்களே
அல்லாமல், கண்டிக் கொழுமணிக் கலனும் பூணும் - உருத்திராக்க
மாலையாகிய கொழுவிய மணிக்கலனையும் அணியும், குளிர் நிலா நீற்று
மெய்யர் - தண்ணிய நிலாப்போலுந் திருநீறு தரித்த மேனியையுடையார்,
வழு அறத்தெரிந்த செஞ்சொல் மாலையால் அன்றி - குற்றமற ஆராய்ந்த
செவ்விய சொற்களாற் றொடுக்கப்பட்ட பாமாலை யாலல்லாமல், ஆய்ந்த
செழுமலர் மாலையாலும் - ஆராய்ந்தெடுத்துத் தொடுத்த புதிய
மலர்மாலையினாலும், சிவார்ச்சனை செய்யும் நீரார் - சிவ வழிபாடு செய்யுந்
தன்மையையுடையார்.

     பாமாலை சூட்டுவதும் அருச்சனையாதலை,

"மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகு மாதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்"

என்று சிவபிரான் வன்றொண்டர்க்கு அருளினமை கூறும் பெரியபுராணச்
செய்யுளால் அறிக. (12)

புலந்தொறும் போகிப் போகிப் புலமையால் வென்று வென்று
மலர்ந்ததண் பொருநை நீத்த வளங்கெழு நாட்டில் வந்து
நிலந்தரு திருவி னான்ற நிறைநிதிச் செழியன் செங்கோல்
நலந்தரு மதுரை நோக்கி நண்ணுவார் நண்ணு மெல்லை.

     (இ - ள்.) புலந்தொறும் போகிப் போகி - நாடுகள்தோறுஞ் சென்று
சென்று, புலமையால் வென்று வென்று - புலமைத் திறத்தால்
அங்குள்ளவர்களை வென்று வென்று, மலர்ந்த தண் பொருநை நீத்தம் -
பரந்த தண்ணிய பொருநை வெள்ளத்தால், வளம் கெழு நாட்டின் வந்து -
வளம் மிக்க பாண்டியநாட்டின்கண் வந்து, நிலம் தருதிருவில் - மாற்றாரது