மண் சுமந்த படலம்371



     (இ - ள்.) அன்று - அந்நாளில், சிறுத் தொண்டர்ா இடும்
பிள்ளைக்கறி அமுதும் - சிறுத்தொண்ட நாயனார் இட்ட
பிள்ளைக்கறியமுதினையும், வேடன் இட்ட - கண்ணப்ப நாயனார் இட்ட,
மென்று சுவை தெரிந்த ஊனும் போல் - அவரால் மென்று சுவை
தெரியப்பெற்ற ஊனமுதினையும் போல, நரையாட்டி இடுபிட்டும் நன்று
நயந்து - நரை முதியாளாகிய வந்தி இட்ட பிட்டினையும் பெரிதும் விரும்பி
நுகர்ந்து, எந்தாய் - எந்தையே, என்றும் - எக்காலத்தும், அடியார்க்கு
எளிவந்தாய் - அடியார் திறத்தில் எளியனாயினாய்.

     சிறுத்தொண்டர் - சிவனடியார்க்கு மிகச் சிறியரா யொழுகும்
தொண்டர். காரணப் பெயர்;

"சீதமதி யரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த
நாதனடியார்தம்மை நயப்பாட்டு வழிபாட்டான்
மேதகையா ரவர்முன்பு மிகச்சிறிய ராயடைந்தார்,
ஆதலினாற் சிறுத்தொண்ட ரெனநிகழ்ந்தா ரவனியின்மேல்."

என்னும் திருத்தொண்டர் புராணச செய்யுள் நோக்குக. சிறுத்தொண்டர்
பிள்ளைக்கறி யமுதிட்ட வரலாற்றையும், கண்ணப்பர் மென்று சுவை தெரிந்த
ஊன் இட்ட வரலாற்றையும் பெரிய புராணத்திற் காண்க. பிள்ளைக்
கறியமுதினை இறைவன் உண்டமை கேட்கப்பட்டிலதேனும் அந் நிவேதனங்
காரணமாக இறைவன் அவர்கட்கு அருள் புரிந்தமையின்
‘பிள்ளைக்கறியமுதும் போல்’ என்றார். கண்ணப்பர் ஊன் சுவை
தெரிந்திட்டமை,

"ஊனமுது கல்லையுடன் வைத்திதுமுன் னையினன்றால்
ஏனமொடு மான்கலைகண் மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு மெனமொழிந்தார்."
"வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பால்
நையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
எய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய."

என முறையே கண்ணப்பர் கூற்றாகவும் சிவபெருமான் கூற்றாகவும்
வந்துள்ள செய்யுட்களாலறிக. திருஞானசம்பந்தப் பிள்ளையார்
வாதவூரடிகட்குப் பிற்காலத்தினர் என்பது இந்நூலாசிரியர் கருத்தாகலின்
பிள்ளையார் காலத்திருந்த சிறுத் தொண்டரும் பிற்காலத்தினரென்பது
இவர்க்கு உடன்பாடாதல் பெறப்படும். அங்ஙனமாயினும் இவ்வரலாறெல்லாம்
இவர்க்கு முற்காலத்தினவாகலின் சிறுத் தொண்டர் செய்தியையும் இங்குச்
கூறினார். இங்ஙனம் நூலாசிரியர்கள் பிறழக் கூறுதல் பலவிடத்துக்
காணப்படும். அன்று என்பதற்கு வருங்காலத்தில் எனப் பொருள்
கொள்ளுதல் சிறப்பின்று. நன்று - பெரிது; தொல்காப்பியத்து உரியியலிற்
காண்க. (85)