நரியாவும் பரியாக்கி நடத்தியுமம் பரமன்றித்
தரியாயான் றருதுகிலைத் திருமுடிமேற் றரித்துமறைக்
கரியாய்நீ யென்பாச மறுக்கவருந் திருமேனி
தெரியாதே பரியாசை திளைத்திறுமாந் திருந்தேனே. |
(இ
- ள்.) மறைக்கு அரியாய் நீ - வேதங்களுக்கு அரியவனாய நீ,
நரியாவும் பரியாக்கி நடத்தியும் - நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி
நடத்தியும், அம்பரம் அன்றித்தரியாய் - திசை வெளியன்றி வேறொன்றையும்
உடுக்காத நீ, யான் தருது கிலைத்திருமுடிமேல் தரித்தும் - அடியேன்
கொடுத்த ஆடையை வாங்கித் திருமுடியின்கண் தரித்தும், என் பாசம்
அறுக்கவரும் திருமேனி தெரியாதே - எனது கட்டினை அறுக்கவரும் நினது
திருமேனியை உணராமல், பரி ஆசை திளைத்து இறுமாந்து இருந்தேனே -
குதிரைகளில் வைத்த விருப்பத்துள் அழுந்தி இறுமாந்திருந்தேனே.
அம்பரம்
- திசை. ஆகாயம்; இறைவன் திசையே
ஆடையாகவுடையனாதலைத் திகம்பரன் என்னும் பெயரானுமறிக. அம்பரம்
ஆடையுமாகலின் இரட்டுற மொழிதலாகக்கொண்டு, திசையாகிய ஆடையன்றி
என உரைத்தலுமாம். திருமேனியின் அருமையைத் தெரியாதே என்க.
தெரியாது, எதிர்மறை வினையெச்சம். இறுமாத்தல் - தருக்குதல்.
தருக்கியிருந்தேன் இஃது என்ன புன்மை என இசையெச்சம் விரித்துரைக்க.
(86)
விண்சுமக்கும் புள்ளாய் விலங்காய்ச் சுழன்றுமனம்
புண்சுமக்குஞ் சூழ்ச்சி வலியுடைய புத்தேளிர்
மண்சுமக்கு மள்ளராய் வந்திலரே வந்தக்காற்
பண்சுமக்குஞ் சொல்லிபங்கன் பா தமுடி காண்பாரே. |
(இ
- ள்.) விண் சுமக்கும் புள்ளாய் - வானாற் சுமக்கப்படும்
பறவையாகியும், விலங்காய்ச் சுழன்று - விலங்காகியும் தேடி வருந்தி, மனம்
புண்சுமக்கும் - (காணாமையின்) மனம் புண்பட்ட, சூழ்ச்சி வலி உடைய
புத்தேளிர் - ஆராய்ச்சி வலியினையுடைய பிரமனுந் திருமாலுமாகிய
தேவர்கள், மண் சுமக்கும் மள்ளராய் வந்திலரே - மண்ணைச் சுமக்கும்
ஏவலாளராய் வந்திலரே, வந்தக்கால் - வந்திருப்பார்களானால், பண்
சுமக்கும் சொல்லிபங்கன் - பண்ணின் சுவையினைத் தாங்கிய
இன்சொல்லையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் வைத்த இறைவனது,
பாதம் முடி காண்பாரே - திருவடியும் திருமுடியையுங் கண்டிருப்பாரே.
வேறு
ஆதரவின்றி விண்ணின் இயங்குதலின் விண் சுமக்கும் புள்
என்றார். புள் - அன்னம். விலங்கு - பன்றி. சூழ்ச்சி வலியுடைய என்றது
நகுதற் குறிப்பு. பிரமனையும் திருமாலையும் முன்னர்க்கூறி, பாதம் முடி
காண்பார் எனப் பிற்கூறினமையின் இது மயக்க நிரனிறை. வந்திலரே
காண்பாரே என இரங்கிக் கூறுவது போன்று இறைவன் பிரமன்மால்
காணாப் பெரியன் ஆதலையும், அடியார்க்கு எளியனாதலையும்
விளக்கினமை காண்க. (87)
|